சங் 119 : 60. உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை தீவிரித்து செய்கிறோம். பிள்ளைகளுக்கு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ விண்ணப்பம் போட தீவிரித்து செயல்படுகிறோம்; பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் வெளியிடுவதற்கு முன்பே தீவிரமாக முன்நடவடிக்கைகளை செய்கிறோம். அரசாங்கத்திலோ அல்லது மற்ற நிறுவனங்களிலோ நல்ல வேலை வாங்குவதற்கு தீவிரமாக செயல்படுகிறோம்; எங்கேயாவது இலவசமாக ஏதாவது தருகிறார்களென்றால் தீவிரமாக ஓடுகிறோம். இப்படியிருக்க கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள தீவிரம் காட்டுகிறோமா ? இல்லை தாமதம் செய்கிறோமா ?
ஒரு கிருஸ்தவ நண்பனிடம் ஒருவன் போய் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்லலாமென்று கேட்டபோது அந்த நண்பன் சொன்னான் இது வாலிப பருவம்; இந்த வயதில் நாம் உல்லாசமாக சுத்தலாம்; ஐம்பது வயதுக்குமேல் ஆராதனைக்கு செல்லலாம் என்று.
ஒரு கல்லூரி வாலிபனுக்கு நெருங்கிய தோழி இருந்தாள். அவள் சொன்னால் நீ புகைபிடிப்பதை விட்டுவிடு என்று. உடனே அவன் தன்னுடைய தோழி சொல்லிவிட்டாள் என்று அந்த பழக்கத்தை விட்டுவிடுகிறான். ஆனால் அதே நபருக்கு சபையில் பிரசங்கம் மூலமாக கர்த்தருடைய வசனத்தின்படி புகை பிடிக்காதே என்று சொன்னால் அதற்கு கீழ்ப்படிய தீவிரம் காட்டுவதில்லை.
ஊர் ஊராக, தெரு தெருவாக போய் அரசியல்வாதிகளுக்காகவும், சினிமாக்காரர்களுக்காகவும் பொய் பிரச்சாரம் செய்ய சொன்னால் அநேக கிருஸ்தவர்கள் தீவிரம் காட்டுகிறோம். ஆனால் அதே வேளையில் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்ற கர்த்தருடைய கட்டளையை நிறைவேற்றச்சொன்னால் தீவிரம் காட்டுவதில்லை.
ஒரு தீர்மானம் எடுங்கள். ஒவ்வொருநாளும் கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள தீவிரப்படுங்கள். அவருடைய கற்பனைகளை தேடி வாசியுங்கள்.
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன் (சங் 119 : 33 ) என்ற வசனத்தின்படி அவர் பிரமாணங்களை காத்துக்கொள்ளுங்கள்; தாமதியாதேயுங்கள்; தீவிரமாய் வசனத்தை கைக்கொள்ள செயல்படுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org