ஆதியாகமம் 28:22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
வேதாகமத்தில் அநேக இடங்களில் தேவமனிதர்கள் பொருத்தனைபண்ணினார்கள் என்று வேதாகமத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்கிறோம். யாக்கோபு கர்த்தருக்கு தசமபாகம் செலுத்துவேன் என்றும், ஆகம புஸ்தகங்களில் அநேக இடங்களில் கர்த்தர் பொருத்தனைகளின் அவசியத்தைக்குறித்தும், அன்னாள் கர்த்தரிடம் தனக்கு ஒரு ஆண்பிள்ளையை கொடுத்தால் அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனையும், எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான் என்றும், தேவனே நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன் என்று சங்கீதக்காரனும், நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன் என்று யோனாவும், சொல்லுவதை வேதாகமத்தை வாசிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.
நாம் எப்படிப்பட்ட பொருத்தனைகள் பண்ணினாலும் அதை செய்ய கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு சில பொருத்தனைகள் கர்த்தருடைய பார்வையில் அங்கீகரிக்கப்படாமல் போய்விடும் . நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது (லேவியராகமம் 22:23 ). நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய் (பிரசங்கி 5:4 ) என்றும் வசனம் சொல்வதை பார்க்கலாம்.
பொருத்தனையை செலுத்தி கர்த்தரிடம் வேண்டுதல் செய்வதைக்குறித்தும் வேதத்தில் வாசிக்கமுடிகிறது. ஆகையால் ஏதாவது ஒரு காரியத்துக்காக நீங்கள் காத்திருப்பீர்களென்றால், பொருத்தனை செலுத்தி வேண்டுதல் செய்து பாருங்கள். குறைந்தது மூன்று மாதங்களுக்குள் வேதாகமத்தை படித்து முடிக்கவேண்டுமென்றோ, தினமும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கவேண்டுமென்றோ, ஜெபநேரத்தை கூட்டவேண்டுமென்றோ, மாதத்தில் ஒரு நாள் இரவெல்லாம் ஜெபிக்கவேண்டுமென்றோ, தசமபக்தை சபைக்கு கொடுக்கவேண்டுமென்றோ, குறைந்தது இத்தனை நபர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றோ பொருத்தனை செய்து வேண்டுதல் செய்யுங்கள்; அந்த பொருத்தனையையும் தவறாமல் செய்து முடியுங்கள்.
அன்னாள் பொருத்தனையை கர்த்தர் கேட்டு அவளுக்கு ஆண் குழந்தையை கொடுத்தார். அதுபோல நீங்கள் செலுத்தும் பொருத்தனையும் அங்கீகரிக்கப்பட்டு அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
நாகூம் 1:15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான் என்ற வசனத்தின் படி உங்கள் பொருத்தனையை கர்த்தருக்கு செலுத்துங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org