பிரசங்கி 3 12. மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
சாலொமோன் ஞானி பிரசங்கி புஸ்தகத்தில் மாயை குறித்தும், காலங்களை குறித்தும், சூரியனுக்கு கீழே நடக்கும் காரியங்களை குறித்தும் எழுதும்போது இரண்டுகாரியங்கள் மனுஷருக்கு நன்மையை உண்டாக்குமென்று எழுதிவைத்திருப்பதை பார்க்கலாம்.
முதலாவது மகிழ்ச்சியாயிருப்பது. எப்படிப்பட்ட மகிழ்ச்சி ?. சங்கீதக்காரன் சொல்கிறான் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் ( சங் 37 : 4 ) என்பதாகவும், மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் ( சங் 100 : 2 ) என்பதாகவும், உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன் ( சங் 119 : 16 ) என்பதாகவும், உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி ( சங் 119 : 174 ) என்பதாகவும், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே தேவ பெலன் என்றும் வாசித்து புரிந்துகொள்ளலாம். இதை தவிர வேறெந்த தவறான பழக்கத்தினால் வரும் மகிழ்ச்சியும், சிற்றின்பத்தினால் வரும் மகிழ்ச்சியும், மற்றவர்களை குறைகூறுவதால் வரும் மகிழ்ச்சியும் மாயை. ஆகையால் எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நன்மை செய்வது. இயேசு ஊழியம் செய்த நாட்களில் நன்மை செய்கிறவராகவே சுற்றி திரிந்தார். தன்னை கைது செய்யவந்தவனின் காதை பேதுரு வெட்டினபோதும், அவன் காதை திரும்பவும் ஒட்டி அவனுக்கு இயேசு நன்மை செய்தார். குற்றுயிராய் கிடந்த ஒருவனை சமாரியன் ஒருவன் கண்டு பக்கமாய் விலகிப்போகாமல் அவனுக்கு நன்மைசெய்கிறவனாக காணப்பட்டான். யோபு தான் ஐசுவரியவனாக இருந்தபோது திக்கற்றவர்கள், அனாதைகள், விதவைகள் என்று அனைவரையும் ஆதரித்து வந்தான். உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என்று இயேசு ஒருமுறை சொன்னார். கைமாறு கருதாமல் நன்மை செய்ய வேண்டும். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே என்றும் ஆண்டவர் சொல்கிறார்.
சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள் (II தெச 3:13 ) என்ற வசனத்தின்படி எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையை செய்ய சோர்ந்துபோகாமல் இருப்போம். அதுவே உங்களுக்கு நன்மையாயிருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org