ஏசாயா 27:1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கு ஒரு பாம்பாக சாத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தால், ஏன் ஒரு பயங்கரமான கடல்-டிராகனாக தன்னை வெளிப்படுத்தக்கூடாது? லிவியாதான் என்னும் இந்த பாம்பானது சமுத்திரத்தில் இருக்கும் என்று இந்த வசனம் சொல்வதை பார்க்கலாம். அப்படியென்றால் உலகம் முழுவதிலும் இந்த கொடிய பாம்பானது கர்த்தருடைய பிள்ளைகளை, விசுவாசிகளை, ஊழியம் செய்பவர்களை வஞ்சிக்கவேண்டுமென்று எங்கும் பரம்பி இருக்கிறது என்பதை நான் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? (யோபு 41 : 1 ). இந்த பொல்லாத பாம்பை தூண்டிலினால் பிடிக்க அது வழுவிப்போய்விடக்கூடியதாயிருக்கும். மாத்திரமல்ல கயிற்றினால் பிடிக்க இயலாது. அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது ( யோபு 41 : 34 ). இந்த லிவியாதான் என்னும் பாம்பு அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது; அப்படியென்றால் துன்மார்க்கருக்கெல்லாம், தவறான வழியில் சம்பாதிப்பவர்களுக்கெல்லாம், கொலைசெய்பவருக்கெல்லாம், விபச்சாரம் வேசித்தனம் செய்பவர்களுக்கெல்லாம், கோபக்காரர்களுக்கெல்லாம், அரசியல் தலைவர்களில் உள்ள துன்மார்க்கருக்கெல்லாம், ஆளுகையில் இருக்கும் துன்மார்க்கருக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது. இப்படிப்பட்ட இந்த பொல்லாத பாம்பிற்கு எச்சரிக்கையாயிருங்கள்.
இருந்தாலும் மேசியா கடைசிக்காலத்தில் இந்த நீண்ட பாம்பை தமது பட்டயத்தால் தண்டிப்பார்; கொன்றுபோடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக இங்கே ஆண்டவர் எழுதிவைத்திருப்பதை பார்க்கலாம். ஆகையால் இந்த லிவியதனுக்கு ஒரு முடிவு உண்டு என்று அறிந்து அதற்கு பயப்படாமல் இருங்கள். இந்த பொல்லாத லிவியாதானுக்கு எதிர்த்து நில்லுங்கள். எப்பொழுதும் ஜெபத்திலும், வேத தியானத்திலும், கர்த்தருக்கு கீழ்ப்படிதலிலும், பரிசுத்தத்திலும் தேறினவர்களாயிருக்கும்போது கர்த்தர் நமக்கு இப்படிப்பட்ட லிவியாதான்கலை மேற்கொள்ள பெலன்கொடுப்பார். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;
ஒரு நாள் வரும், அந்நாளில் கர்த்தர் இந்த பாம்பை என்ன செய்வார்? பொல்லாதவர்களுக்கு ராஜாவாயிருந்த நீண்ட பாம்பை ஆண்டவர் என்ன செய்வார்? வசனம் சொல்கிறது உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள் ( வெளி 12 : 9 ) என்பதாக. ஆகையால் இப்பொழுது இதற்கு தப்பும்படி நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (எபே 6 : 11 ).
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org