கிரயம் செலுத்தி கர்த்தருக்குப் பலியிடுங்கள்.

அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல,  நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி,  கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல்,  அதைப் பெறும் விலைக்கு வாங்குவேன். (1 நாளா. 21:24).

தாவீது ராஜாவின் இருதயத்தைச் சாத்தான் ஏவிவிட்டதின் நிமித்தம் இஸ்ரவேல் ஜனங்களை தொகையிடும்படிக்கு தாவீது கட்டளையிட்டான். ஆகையால் நம் இருதயங்களில் தோன்றுகிற ஏவுதல்கள் எல்லாம் சுயத்திலிருந்து தோன்றுகிறதா,  தேவ ஆவியானவரிடமிருந்து வருகிறதா,  அல்லது சாத்தான் ஏவுகிறானா என்பதைச் சோதித்தறியவேண்டும். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும்படி அவர்களை எண்ணும்போது,  அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு,  அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் அவனவன் ஆத்துமாவுக்காக கர்த்தருக்கு மீட்கும் பொருளாக,  இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அரைச்சேக்கல் காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளை. ஆனால் தாவீது சாத்தானின் ஏவுதலுக்கு,  தன் மேட்டிமையின் நிமித்தம் இடம்கொடுத்ததினாலே,  ஜனங்களை எண்ணும்படிக்கு யோவாபிடம் கூறினான். ஆகையால் மூன்று நாட்கள் கொள்ளைநோய் இஸ்ரவேலின் மேல் வந்ததினால் எழுபதினாயிரம் பேர் மரித்துப் போனார்கள். எருசலேமையும் அழிப்பதற்குத் தேவதூதன் ஓர்னாவின் களத்தண்டையில் நிற்கையில்,  கர்த்தர் போதும் நிறுத்து என்று என்றார். அந்தவேளையில் கர்த்தருடைய தூதன் ஓர்னாவின் களத்திலே கர்த்தருருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு, தாவீதுக்கு அறிவிக்கும்படி காத் தீர்க்கதரிசிக்குக் கட்டளையிட்டான். ஓர்னான் அந்த நிலத்தை இலவசமாக தன் தேசத்தின் ராஜாவாகிய தாவீதுக்கு கொடுக்க முன்வந்தும்,  தாவீது உன்னுடையதை இலவசமாய் வாங்கி கர்த்தருக்குப் பலியிடுவதில்லை அதை முழு விலைகொடுத்து வாங்குவேன் என்று கூறி அறுநூறு சேக்கல் நிறைபொன்னான,  அதிக மதிப்புள்ள கிரயத்தை ஒர்னானுக்கு கொடுத்து அந்த இடத்தைக் வாங்கி கர்த்தருக்கு சர்வாங்க தகனபலி செலுத்தினான். ஆகையால் வாதையும் நிறுத்தப்பட்டது. அந்த இடம் மோரியா மலையாக இருந்தது,  பின்னாட்களில் சாலோமோன் ராஜாவால் தேவாலயம் அதே இடத்தில் கட்டப்பட்டது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,  நாம் கர்த்தருக்கென்று பலிசெலுத்த விரும்பினால் அதற்குரிய கிரயம் செலுத்திப் பலியிடவேண்டும். இந்நாட்களில் கர்த்தரை ஆராதிக்க,  அவரை தொழுதுகொள்ள நாம் கிரயம் செலுத்த விரும்புவதில்லை,  செலவு செய்து கர்த்தருடைய சமூகத்திற்குக்கூட வர விரும்புவதில்லை. அது கர்த்தர்பேரில் நாம் வைத்திருக்கிற குறைவான மதிப்பையும்,  அன்பின்மையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் கிரயம் செலுத்தி அவரை தொழுதுகொள்ளும்போது,  அது ஆண்டவர் பேரில் நாம் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறது.  இயேசு லாசருவின் வீட்டில் பந்தியிருந்த வேளையில் அவனுடைய சகோதரி மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து,  அதை இயேசுவின் பாதங்களில் பூசி,  தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள், அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து  இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று,  தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.  அப்பொழுது இயேசு இவளை விட்டுவிடு,  என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்று கூறி அவளுடைய அன்பை மெச்சுகிறதைப் பார்க்கமுடிகிறது. முந்நூறு பணம் என்பது அந்நாட்களில் ஒருவனுக்கு ஒருவருட கூலியாகக் காணப்பட்டது.  தன் நேசரின் மேல் கொண்ட அன்பிற்கு முன்பு முந்நூறு பணம் என்பது அவளுக்கு அற்பமாகக் காணப்பட்டது.

கர்த்தருடைய பிள்ளைகள் கிரயம் செலுத்தி கர்த்தரை சேவிக்கும்போது,  அவருடைய சமூகத்தை தேடும்போது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *