உங்களை நோக்கிப்பார்க்கிற கர்த்தர்.

…சிறுமைப்பட்டு,  ஆவியில் நொறுங்குண்டு,  என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் (ஏசாயா. 66:2).

கர்த்தர் உங்களை நோக்கிப்பார்த்தால் உங்கள் சூழ்நிலைகள் மாறும். உங்கள் கஷ்டங்கள் விலகும்,  வியாதியின் வேதனைகள் மறையும்,  உங்கள் வாழ்க்கைச் செழிக்கும். ஆனால் கர்த்தர் நம்மை நோக்கிப் பார்க்க நம்மில் சில குணாதிசயங்கள் காணப்பட வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் சொல்லுகிறது.

ஆவியில் சிறுமையுள்ளவர்களை,  தாழ்மையுள்ளவர்களைக் கர்த்தர் நோக்கிப்பார்க்கிறார். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும்,  தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்,  மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். பரிசேயனும்,  ஆயக்காரனும்  ஜெபிக்கும் படிக்குத் தேவாலயத்திற்கு கடந்து சென்றார்கள். பரிசேயன் நான் மற்ற மனுஷரைப்போலவும்,  இந்த ஆயக்காரனைப்போலவும் இல்லை,  ஆகையால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றான்.  ஆயக்காரன் தூரத்திலிருந்து தன் மார்பிலே அடித்துக்கொண்டு,  தேவனே,  பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். பரிசேயன் மற்றவர்களைப் பார்த்தான்,  அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப்பார்த்து மேன்மைகொண்டான். ஆயக்காரன் தன்னைப் பார்த்தான். ஆகையால் ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்,  தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்,  தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு கூறினார். ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்கள் குறைகளை உற்றுப்பார்த்து,  தங்களைச் சரிசெய்ய முயற்ச்சிப்பவர்கள். வேதமாகிய கண்ணாடியில் தங்களை உற்றுப்பார்த்து,  இயேசுவின் சாயலுக்கு நேராகக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை மாற்ற முயற்ச்சிப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் கர்த்தருக்கு பிரியமானவர்கள்,  அவர்களை அவர் நோக்கிப்பார்த்து ஆசீர்வதிப்பார்.

ஆவியில் நொறுங்குண்டவர்களை நோக்கிப்பார்க்கிற கர்த்தர். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைக் கர்த்தர் புறக்கணிப்பதில்லை. நொறுங்குண்ட,  பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் அவர் வாசம் செய்கிறவர். பாடுகள்,  உபத்திரவங்களின் வழியாக நீங்கள் கடந்துசெல்லும் போது நண்பர்கள் விலகிவிடுவார்கள்,  குடும்பத்தினர் கூட கைவிட்டுவிடுவார்கள்,  ஆனால் இயேசு உங்களை விட்டு விலகாதவர்,  உங்களை நோக்கிப்பார்க்கிற நல்ல தகப்பன் அவர். ஆகையால் அவரை ஆதாரமாக்கிக் கொள்ளுங்கள். நாயீன் என்னும் ஊருக்குப் இயேசு போனபோது,  மரித்துப்போன ஒரு வாலிபனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்,  அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ விதவையாயிருந்தாள். தானும் விதவை,  தனக்கு இருந்த ஒரே குமாரனும் மரித்துப் போனான். அவள் நிலைமையைக் கர்த்தர் கண்டு அவளை நோக்கிப்பார்த்து,  அவள் மேல் மனதுருகி,  அழாதே என்று சொல்லி,  பாடையைத் தொட்டு,  வாலிபனே,  எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து,  பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். உங்களை நோக்கிப்பார்த்து,  உங்கள் நிலைமைகளைக்  கண்டு, மனதுருகி, அற்புதம் செய்து மகிழப்பண்ணுவார்.

கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறவனை நோக்கிப்பார்க்கிற கர்த்தர். இந்த நாட்களில் கர்த்தருடைய வசனத்திற்குப் பயப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகிறது. கர்த்தரும் அவருடைய வார்த்தையும் ஒன்று,  அவர் அவருடைய சகல பிரஸ்தாபங்களைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். எஸ்றாவின் நாட்களில்,  அவன் கர்த்தருடைய வார்த்தைகளைக் போதித்த போது,  இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபையின் ஜனங்கள்,  கர்த்தருடைய வார்த்தையை கேட்டு நடுங்கி,  மிகவும் அழுது,  தங்கள் பொல்லாத வழிகளை விட்டு கர்த்தருக்கு நேராகத் திரும்பினார்கள். நாமும் கர்த்தருடைய வார்த்தைக்கு முன்பு நடுங்கி,  கர்த்தருக்கு நேராகத் திரும்பும் போது அவர் நம்மை நோக்கிப் பார்த்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *