நிருணயம்பண்ணிச் சுதந்தரியுங்கள்.

நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும், உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும் (யோபு 22:28).

கர்த்தருடைய ஜனங்கள் ஒருகாரியத்தை நிருணயம்பண்ணி, அதற்குரிய வாக்குத்தத்த வசனங்களைப் பேசி உரிமைக் கோரும் போது, அந்த காரியத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கைகூடிவரப்பண்ணுவார்.  கர்த்தருடைய ஆவியானவரால் ஏவப்பட்டு தேமானியனான எலிப்பாஸ் யோபுவுக்கு கொடுத்த ஆலோசனையாய் காணப்படுகிறது. யோபுவின் நண்பர்கள் பேசின அனேக வார்த்தைகள் யோபுவுக்கு வேதனையைக் கொண்டு வந்ததாயிருந்தாலும், சில வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் காணப்படுவதையும் பார்க்கமுடியும். பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வருவிக்கிறவர் நம்முடைய தேவன்.

ஒருகாரியத்தை நிலைவரப்படுத்திச் சுதந்தரிப்பதற்கு,  நாம் கர்த்தருக்குப் பிரியமான ஜீவியம் செய்வது அவசியமாயிருக்கிறது. ஒருவேளை பாவத்தில் ஜீவித்துக்கொண்டு, மரணமும் ஜீவனும் என் நாவின் அதிகாரத்தில் காணப்படுகிறது, ஆகையால் பேசுவதைப் பெற்றுக்கொள்ளுவேன் என்று சொல்வீர்கள் என்றால், உங்களை நீங்களே ஏமாற்றுகிறவர்களாய் காணப்படுகிறீர்கள். அப்படிப்பட்ட உபதேசங்கள் இந்த நாட்களில் பெருகிக்காணப்படுகிறது. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம்  கர்த்தருக்கு அருவருப்பானது. மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து, பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றவுடன் பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி ஓடிப்போனார்கள். ஆகையால் ஜெபத்திலே வேண்டுவதையும், கட்டளையிடுவதையும் பெற்றுக் கொள்ளுவதற்குப் பரிசுத்தமான ஜீவியம் அவசியம். அதுபோல விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே நீங்கள் எவற்றைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள். விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். விசுவாசத்தினால் வராதது எல்லாம் பாவம் என்றும் வேதம் கூறுகிறது.   ஆகையால் நாம் ஒருகாரியத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவதற்கு, சற்றும் சந்தேகப்படாத விசுவாசமும் நமக்குள்ளாய் காணப்படவேண்டும். விசுவாசத்தோடு மலைகளைப் பார்த்துப் பெயர்ந்து சமுத்திரத்தில் போ என்று பேசும் போது அது அப்படியே ஆகும். காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்று இயேசு கூறியவுடன் காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. காற்றுக்கும், அலைக்கும், கர்த்தருடைய சிருஷ்டிகள் அத்தனைக்கும் கேட்கிற திறன் காணப்படுகிறது. அவைகளைப் பார்த்து நீங்கள் பேசும்போது அவைகள்  உங்களுக்கு கீழ்ப்படியும். 

கர்த்ததருடைய நாமத்தை தரித்திருக்கிற தேவஜனங்கள், உங்களுக்கு வேண்டிய ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும், நீங்கள் நிர்ணயம்பண்ணி, எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொன்ன கர்த்தருடைய நாமத்தில் கட்டளையிட்டு, எல்லாவற்றையும் சுதந்தரிக்கிற நாட்களாய் இந்த நாட்கள் காணப்படுகிறது. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்ற வார்த்தையின்படி பிசாசு உங்களிடம் இருந்து திருடின நன்மைகளையும், ஆரோக்கியத்தையும், ஐசுவரியங்களையும் கர்த்தருடைய வார்த்தைகளின் மூலம் உரிமைகோரி, திரும்பப்பெறுகிற நாட்கள் இந்த நாட்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.  நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்கள் எழுப்புதலின் காலமாய் காணப்படுகிறது. பின்மாரி மழைக்காய் வேண்டிக்கொள்ளுங்கள்  என்று கர்த்தர் கூறியிருக்கிறார். ஆகையால் எழுப்புதலை நிர்ணயம்பண்ணி, அதை நம்முடைய வாழ்நாட்களில் காண்பதற்கும் கர்த்தருடைய ஜனங்கள் கருத்தாய் ஜெபிக்கவேண்டும். அப்போது அப்போஸ்தலர்களுடைய நாட்களில் பெய்த முனமாரியின் எழுப்புதல் மழை, பின்மாரி மழையாய் நம்முடைய நாட்களிலும் பெய்வதை நம்முடைய கண்கண் காணும்படிக்கு கர்த்தர் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *