கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்(1 சாமுவேல் 16:1).
கர்த்தராகிய ஆண்டவர் சாமுவேலை நோக்கி, நீ உன் கொம்பை தைலத்தினால் நிரப்பிக்கொண்டு வா, நான் தெரிந்துக்கொண்டவனை அபிஷேகம் செய், அவன் என் இருதயத்திற்கு ஏற்றவன், நான் அவனை என் ஜனத்திற்கு ராஜாவாக தெரிந்துக் கொண்டேன் என்றார். தாவீதை அபிஷேகம் செய்த கர்த்தர், இன்று உன்னை அபிஷேகம் செய்யும்படிக்கு கொம்பை தைலத்தினால் நிரப்பிக்கொண்டு கடந்து வந்திருக்கிறார். அவர் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்ய விரும்புகிறார். இந்த அபிஷேகத் தைலம் ஒருவன் மேல் ஊற்றப்பட்டால், அவன் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு மாற்றப்படுகிறான்.
தாவீது ஆடுகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஒரு சாதாரண வாலிபன். அபிஷேகத் தைலம் அவன் சிரசின்மேல் ஊற்றப்பட்ட வேளையில் அவன் இஸ்ரவேலுக்கு மேய்ப்பனாகவும், ராஜாவாகவும் உயர்த்தப்பட்டான். ஆரோன் எகிப்திலே அடிமையாய் இருந்தவன், செங்கற்கள் அறுத்து சீரழிந்தவன். இவன் சிரசின்மேல் அபிஷேகத் தைலம் ஊற்றப்பட்டபொழுது(யாத் 28:7), பிரதான ஆசாரியனாக மாற்றப்பட்டு மகா பரிசுத்தஸ்தலத்திற்கு போகக்கூடிய பாக்கியத்தையும் பெற்றான். சேனாதிபதியாக இருந்த ஏகூவின் மேல் கர்த்தருடைய அபிஷேகத் தைலம் ஊற்றப்பட்ட பொழுது சாதாரண மனிதனாக இருந்தவன் இஸ்ரவேலுக்கு ராஜாவாக உயர்த்தப்பட்டான்(2 இராஜா 9:6).
இந்த அபிஷேகத் தைலம் பின்னாட்களில் பரிசுத்த ஆவியானவரால் பெந்தகோஸ்தே என்னும் நாளில் மேல் வீட்டு அறையில் கூடியிருந்த சீஷர்களின் மேல் ஊற்றப்பட்ட வேளையில்(அப் 1:3,4), சாதாரண சீஷனாய் இருந்த பேதுருவை பிரதான அப்போஸ்தலனாக மாற்றியது. இந்த அபிஷேகம் முடவர்களை நடக்க செய்தது, இந்த அபிஷேகம் திரளான பிணியாளிகளை குணமாக்கியது(அப் 5:16) இந்த அபிஷேகம் மரித்துப்போன தபீத்தாளை உயிரோடு எழுப்ப செய்தது( அப் 9:40). பவுலை குறித்து பார்க்கும் பொழுது; இவன் கர்த்தருடைய சீஷர்களை துன்பப்படுத்துகிற பரிசேயனாக இருந்தவன். ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் ஊற்றப்பட்ட வேளையில்(அப் 9:17) அவனுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது. இந்த அபிஷேகம் இவனை புறஜாதிகளுக்கு கிறிஸ்துவை வைராக்கியமாய் அறிவிக்கின்ற பிரதான அப்போஸ்தலனாக மாற்றியது.
கர்த்தருடைய பிள்ளைகளே! பரிசுத்த ஆவியானவர் கொம்பை தைலத்தினால் நிரப்பிக்கொண்டு உங்களை அபிஷேகம் செய்யும்படி உங்கள் மத்தியில் கடந்து வந்திருக்கிறார். இந்த அபிஷேகம் உன்னை விலையேறப்பெற்றவனாய் மாற்றும். இந்த அபிஷேகத் தைலம் உன் மேல் ஊற்றப்பட்டால் நீ விலையேறப்பெற்ற பாத்திரமாய் மாறுவாய். இந்த அபிஷேகம் உன்னை அடுத்த நிலைக்கு கொண்டுச்செல்லும். இதே அபிஷேகம் சீஷர்கள் மேல் ஊற்றப்பட்ட வேளையிலே, அவர்கள் உலகத்தை கலக்குகிறவர்களாய் மாறினார்கள். இந்த அபிஷேகம் உங்கள் மேல் ஊற்றப்பட்டால் நீங்களும் இந்த உலகத்தை கலக்குகிறவர்களாய் மாறுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org