தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங். 139:24).
சங்கீதக்காரனாகிய தாவீது தேவனை நோக்கி என்னை ஆராய்ந்து பார்த்து, உம்மை வேதனைப் படுத்தும் வழிகள் என்னில் உண்டோ என்று பார்த்து என்னை நித்திய வழியில் நடத்தும் என்று ஜெபிக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளும் அனுதினமும் தேவனை நோக்கி உம்மை வேதனைப்படுத்துகிற காரியங்கள் என்னில் என்ன காணப்படுகிறதை என்பதை உணர்த்தும் என்று ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும். தன் பிழைகளை உணருகிறவன் யார்? என்று வேதம் கேட்கிறது, பொதுவாக நாமெல்லாரும் மற்றவர்கள் பிழைகளையும், குற்றங்களையும் பார்க்கிறவர்களாய் காணப்படுவதுண்டு, நம்முடைய தவறுகளை உணருவதில்லை. என்னை ஆராய்ந்து, என்னைச் சோதித்து, உம்மை வேதனைப்படுத்துகிற வழிகளை எனக்கு வெளிப்படுத்தும் என்பது மேன்மையான ஜெபமாய் காணப்படுகிறது. அது நம்மை இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக படிப்படியாக மாற்றும்.
ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! (சங்-81:13) என்பது கர்த்தருடைய விருப்பம். கர்த்தருடைய ஜனம் அவருடைய வழிகளில் நடக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவருடைய வழிகள் நித்தியவழிகள், நம்மை நித்தியத்தில் கொண்டு சேர்க்கும் வழிகள். இயேசு கூறினார், நானே வழி, இயேசுவின் மூலமாயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் செல்லமுடியாது. அவர் சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய ஜனங்கள் பூர்வ பாதைகள் எவை என்று கேட்டு விசாரித்து அவைகளில் நடக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும். அவருடைய வார்த்தை கர்த்தருடைய வழிகளை நமக்குப் போதிக்கிறது.
பிலேயாமுடைய வழி கர்த்தருக்கு மாறுபாடாயிருந்தது, ஆகையால், கர்த்தருடைய தூதன் அவனுக்கு எதிராக உருவினப் பட்டயத்தோடு அவனைக் கொல்லும் படிக்குப் புறப்பட்டு வந்தான். நம்முடைய வழிகள் தாறுமாறாய், கர்த்தருக்கு விரோதமாய் காணப்படும் போது கர்த்தர் நமக்கு எதிராய் எழும்புவார். மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாது என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார், அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அதுபோல இஸ்ரவேலின் முதல் ராஜாவாய் சவுலை ஏற்படுத்தினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது, அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்று சாமுவேலோடு கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் வழிகளை ஒவ்வொரு நாளும் உய்த்து ஆராய்ந்துபாருங்கள். தேவனை வேதனைப் படுத்துகிற காரியங்களை விட்டு விலகிவிடுங்கள். கர்த்தருடைய ஆவியானவரை துக்கப்படுத்துகிற எந்தக் காரியங்களையும் செய்து விடாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்கள் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar