மீகா 4 : 1. ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
2 . திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
எப்படி சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டதோ, எப்படி இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டாரோ, அதேபோல கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் மலைகளின் மேல் உயர்த்தப்படும். அப்பொழுது எல்லா ஜாதிகளும் அதற்கு நேராக வருவார்கள். எந்த வித்தியாசமுமின்றி, பாகுபாடுமின்றி, கீழ் ஜாதி மேல் ஜாதி என்று இல்லாமல் எல்லா ஜாதிகளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு நேராக வரும்.
திரளான ஜாதிகள் கர்த்தருடைய ஆலயத்துக்கு போவோம் வாருங்கள் என்று சொல்வார்கள். சிறியோர்கள் துவக்கி, பெரியோர்கள் வரை, மாத்திரமல்ல தேசத்தை ஆளுகை செய்கிற ராஜாக்கள், அதிபதிகள், பிரபுக்கள் ஆர்வாமாய் கர்த்தருடைய ஆலயத்துக்கு நேராக ஓடிவருவார்கள். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் ஏன் எல்லாரும் ஓடிவர வேண்டும், நடந்து வரலாமே என்று. ஆராதனை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்குமென்றால் பதினைந்து அல்லது முப்பது நிமிடங்களுக்கு முன்பாக எப்பொழுது இரண்டு மூன்று பேர் உள்ளே வருகிறார்களோ அப்பொழுதே சர்வத்தையும் படைத்தவர் உள்ளே வந்துவிடுவார். ஆகையால் ராஜாக்கள் துவங்கி சிறியோர்கள் வரை ராஜாதி ராஜாவை தொழுதுகொள்ள ஓடி வருவார்கள்.
கடைசி நாட்களில் ஆலயம் ஜனங்களினால் நிரம்பும்; ஆதி அப்போஸ்த்தல நாட்களில் நடந்த எழுப்புதல் மீண்டும் நடக்கும்; ஆவியானவர் பெருமழையாய், அக்கினியாய் இறங்கும்போது அநேகர் இயேசுவை கண்டுகொள்வார்கள்; சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை ஜனங்கள் பார்க்கும்போது கர்த்தர் அவர்கள் எல்லாரையும் தன்னிடம் இழுத்துக்கொள்வார்; ஒரே நாள் ஆராதனையில் மூவாயிரம், ஐயாயிரம், மற்றும் திரளான ஜனங்கள் என்று ரட்சிப்படைவார்கள்; சின்னவன் ஆயிரமாகவும், சிறியவன் பலத்த ஜாதியுமாகவும் ஆவார்கள்; சபை நிரம்பி வழியும்; இடம்கொள்ளாத அளவுக்கு மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து ஓடும்; ஆவியானவருடைய அசைவு பலமாக இருக்கும். அப்படிப்பட்ட நாட்கள் நமக்கு முன்பாக இருக்கிறது. மலைகளுக்கு மேலாக ஆலயம் உயர்த்தப்படும்போது, உலகம் தழுவிய கடைசிகால எழுப்புதல் நடக்கும். அதை நம் கண்கள்; அந்நிய கண்களல்ல, நம்முடைய கண்களே காணும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

