கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்(சங்கீதம் 128:1) என்று வேதம் கூறுகிறது. இப்படிப்பட்டவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்களுடைய குடும்பங்களை தழைக்கச் செய்கிறார்.
பார்வோன் ராஜா, எகிப்திலே அடிமையாய் இருந்த எபிரேயர்களுக்கு விரோதமாய் எழும்பி, அவர்களுக்கு பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்யும்படிக்கு கட்டளையிட்டிருந்தான். அதற்காக எபிரேய மருத்துவச்சிகளை நியமித்ததிருந்தான். அவர்கள் கர்த்தருக்கு பயந்தபடியினால் எபிரேயர்களின் ஆண் குழந்தைகளை கொலை செய்யாதபடி அவர்களை பாதுகாத்தார்கள். இதன் நிமித்தம் கர்த்தர் அந்த மருத்துவச்சியின் குடும்பங்களை தழைக்கும்படி செய்தார்(யாத்தி 1:21)என்று பார்க்கிறோம்.
தேவனுக்கு பயந்த மனுஷனுக்குள் எப்பொழுதுமே, கர்த்தர் என்னை காண்கிறார், என்னை பார்க்கிறார் என்கின்ற அறிவு அவனுக்குள் இருந்துக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவன் ஒருபோதும் தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடவும் மாட்டான், பாவத்திற்கு இடம் கொடுக்கவுமாட்டான். யோசேப்பு ஒரு அழகான வாலிபன், அவன் எகிப்திற்கு அடிமையாய் விற்கப்பட்டவன். அவனுடைய அழகில் மயங்கிய போத்திபாரின் மனைவி அவனை பாவத்திற்கு அழைத்தபோழுது அவன் சொன்ன வார்த்தையாவது; நான் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி என்றான்(ஆதி 39:9) ஆம், தேவனுக்கு பயந்து நடக்கின்ற எந்த மனிதனும் பாவத்திற்கு இடம் கொடுக்கமாட்டான். அதற்கு விலகி தன்னைக் காத்துக்கொள்வான். யோசேப்பு கர்த்தருக்கு பயந்தவனாய் இருந்தபடியினால், கர்த்தர் அவனையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்து அவர்களை தலைக்கச்செய்தார்.
ஒவ்வொருவரும் கர்த்தருக்கு பயந்து நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும். நான் தேவனானால் எனக்கு பயப்படும் பயம் எங்கே(மல்கியா1:6) என்று கர்த்தர் கேட்கிறார். அநேகர் தேவனை அசட்டைப்பண்ணுகிறார்கள். அநேக வேளைகளில் நாம் கர்த்தரை அசட்டை பண்ணுவது உண்டு, அவருக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவதும் உண்டு, நாம் செய்கின்ற பாவங்களை யார் பார்க்கப் போகிறார்கள் என்று, துணிகரமாக சிலர் செய்வதும் உண்டு. ஆனால் வேதம் சொல்லுகிறது கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை, அவருடைய பூரணமான ஏழு கண்கள் பூமியை சுற்றிப்பார்க்கிறது( சகரியா4:10) ஒருவரும் அவருக்கு மறைவாக எதையும் செய்யமுடியாது. தாவீது உரியாவின் மனைவினிடத்தில் பாவம் செய்தபொழுது, யார் இதை பார்க்ககூடும், ஒருவரும் இதை பார்க்கமாட்டார்கள் என்று நினைத்திருக்கக்கூடும். கர்த்தர் அவனை நியாயந்தீர்த்தப் பொழுது; தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்(சங்க51:4) என்றான்.
உங்களுடைய ஜீவியத்தில் பாவங்கள் இருக்குமானால், இப்பொழுதே தேவ சமூகத்தில் அறிக்கையிடுங்கள், தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்(நீதி 28:13). இப்படி அறிக்கையிடுவீர்களானால் கர்த்தர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்கள் எதை செய்தாலும் கர்த்தர் அதை பார்க்கின்றார், அதைக் காண்கிறார் என்கிற அறிவு உனக்குள் இருக்குமானால், பாவத்திலே விழாதப்படிக்கு உன்னை நீயே காத்துக்கொள்ள முடியும். கர்த்தருக்கு பயந்து நடக்கும்பொழுது அவர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீவதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David .P
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org