நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை(யோசுவா 1:5)
கர்த்தருடைய தாசனாகிய மோசே, மரித்தப்பிறகு எல்லாரும் முப்பது நாளளவும் அவனுக்காக துக்கம் அநுசரித்தார்கள். யோசுவா மிகவும் கலங்கிப்போயிருந்தான், மோசே ஒரு பெரிய ஊழியத்தை யோசுவாவின் கையில் ஒப்படைத்திருந்தார். இஸ்ரவேலர்கள் கானானிற்கு அருகில் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் எளிதில் கானானை சுதந்தரிக்க முடியாது. கானானை சுற்றி ஏழு பெரிய ஜாதிகள் இருந்தார்கள். அதிலும் முக்கியமாக கானானுக்குள் கானானியர், ஏத்தியர், பெலிஸ்தியர் என்று மூன்று முக்கிய ஜாதிகள் இருந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவ்வளவு எளிதில் கானானை அவர்களிடமிருந்து பெறமுடியாது. அவர்களிடம் போர் செய்துதான் சுதந்தரிக்க முடியும். இதனால் யோசுவா மிகவும் கலங்கி நின்றான். அந்த வேளையில் கர்த்தர் யோசுவாவை பார்த்து சொன்ன வார்த்தை; பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். மோசே உனக்கு கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம்செய்யக் கவனமாய் மாத்திரம் இரு. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று கர்த்தர் அவனுக்கு வாக்கு கொடுத்திருந்தார்.
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு, அவர்கள் கானானை சுதந்தரிக்கவேண்டும். அதற்கு அவர்கள் பல பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டும். அவர்கள் சத்துருக்களோடு போராடினார்கள். கர்த்தர் அவர்களோடு இருந்தப்படியினால் அந்த ஏழு வகையான ஜாதிகளையும் மேற்கொண்டார்கள். ஒருவனும் அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்க்கக்கூடாமல் போனது.
கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கை நியமித்து வைத்திருக்கிறார். நம்முடைய இலக்கு பரம கானானாகிய பரலோகத்தை சுதந்தரிக்க வேண்டும். ஆனால் அதை அவ்வளவு எளிதில் சுதந்தரிக்க முடியாது. அதை சுதந்தரிக்க வேண்டுமென்றால் இந்த உலகத்தில் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டும். அப்பொழுதான் அதை சுதந்தரிக்க முடியும். நாம் அதை சுதந்தரிக்கக்கூடாதப்படிக்கு இன்றும் அந்த “ஏழு வகையான” ஆவிகள் நம்மோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறது. அதை மேற்கொள்ள வேண்டுமென்றால், கர்த்தருடைய வல்லமையை தரித்துக்கொள்வது அவசியம். இதைக்குறித்து “பவுல்” சொல்லுகிறார். என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்(எபேசியர் 6:10-13)என்று எழுதுகிறார்.
உங்கள் இலக்கை அடைவதற்கு கர்த்தருடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்து, சாத்தானோடு எதிர்த்து போராடுங்கள். சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். அதற்கான அதிகாரம் உங்களுக்கு உண்டு. சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது(லூக் 10:19) என்பது கர்த்தருடைய வார்த்தை. அவருடைய வார்த்தையின்படியே அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் இருக்கிறார். கிறிஸ்துவை உயிரோடு எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறது. பலங்கொண்டு திடமனதாயிருங்கள், கலங்காதிருங்கள், யோசுவாவை கைவிடாத கர்த்தர் உங்களோடு இருக்கிறார். ஒருவனும் உங்களுக்கு முன்பாக நிற்க்கக்கூடாதப்படிக்கு அந்த ஏழு வகையான ஆவிகளையும் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார். நிச்சயமாய் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீவதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்
David. P
Word of God Church
Doha, Qatar
www.wogim.org