இயேசு நின்றால் அற்புதம்.

இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார் (மத். 20:32).

இயேசு தன்னுடைய ஊழியத்தின் பாதையில் கடைசியாக எரிகோவிலிருந்து புறப்பட்டு சுமார் 16 மைல்கள் தொலைவிலிருக்கும் எருசலேமை நோக்கிப் போகிறார்,  மீண்டும் இவ்வழியாய் கர்த்தர் வருவதில்லை. எருசலேமில் அவர் கல்வாரிச் சிலுவையில் உலகத்தின் பாவத்திற்காய் தன் ஜீவனைக் கொடுக்கப் போகிறார். அப்போது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப் படுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு ஒரு அற்புதம் நடப்பதற்கும்,  இயேசுவைச் சந்திப்பதற்கும் கடைசி சந்தர்ப்பம் என்பதையும் உணருகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,  கர்த்தர் நம்மைச் சந்திக்கிற தருணங்களை நாம் சரியாய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரட்சண்ய நேரத்தையும் அற்புதத்தின் வேளையையும் நாம் இழந்தால் திரும்பப் பெறுவது இயலாத காரியமாய் கூட காணப்படலாம்.

நேரத்தின் அருமையை உணர்ந்த இரண்டு குருடர்களும் ஒருமித்து தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர்களுடைய சரீரக் கண்கள் தான் குருடே ஒழிய,  மனக்கண்கள் இயேசுவை மேசியா என்று தெளிவாய் அறிந்திருந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே,  ஒருவேளை சரீரக்கண்கள் கூட குருடாய் காணப்படலாம்,  ஆனால் ஆவிக்குரிய கண்கள் குருடாய் காணப்படக் கூடாது. இயேசுவோடு வந்தவர்கள் அவர்கள் பேசாதிருக்கும்படிக்கு அதட்டினார்கள். சிலவேளைகளில் சீஷர்கள் கூட அதட்டலாம் (மத். 19:13). ஆனால் இரண்டு குருடர்களும் இயேசுவாலன்றி தங்களுக்கு யாரும் அற்புதம் செய்ய முடியாது என்பதையும்,  இந்த தருணம் திரும்ப வருவதில்லை என்பதையும் உணர்ந்து மீண்டுமாய்  அதிக சத்தமாய் ஆண்டவரே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,  சிலவேளைகளில் ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்யக் கூடாதபடிக்கு,  அவரை நோக்கி நீங்கள் கூப்பிடக்கூடாதபடிக்கு மற்றவர்கள் தடையாகக் காணப்படலாம். மௌனமாய் வேண்டுதல் செய்யுங்கள்,  சத்தத்தை உயர்த்தாதிருங்கள் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் உங்கள் தேவைகளையும் அதின் அவசரத்தையும் உணர்ந்த நீங்கள் தான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடவேண்டும். சிலவேளைகளில் மற்றவர்கள் நமக்காய் ஜெபிக்கலாம்,  ஆனாலும் நம்முடைய தேவைகளுக்காக நாம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

இரண்டு குருடர்களுடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு இயேசு நின்றார். சர்வவல்லமையுள்ள தேவன் அவர்,  ஆனாலும் நம்முடைய கூப்பிடுதல்களுக்குச் செவிசாய்க்கிறவர்,  தம்மை நோக்கிக் கூப்பிடுகிற காக்கை குஞ்சின் சத்தத்திற்குக் கூட பதிலளிக்கிறவர். உங்கள் சத்தம் கர்த்தருக்கு இன்பமானது (உன். 2:14). உங்கள் சத்தம் கர்த்தரை நிற்கும்படிக்குச் செய்யும். அவர் நின்றால் அற்புதங்கள் நடக்கும்,  விடுதலை உண்டாகும்,  பாதைகள் திறக்கும். அவர்களை தம்மண்டை அழைத்து நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அன்போடு வினாவினார். அதட்டுகிற ஜனங்கள் நடுவில் அன்போடு விசாரிக்கிற நல்ல தகப்பன் அவர். நம்முடைய தேவைகளை அறிந்திருந்தாலும் நாம் கேட்க வேண்டும் என்றும் விரும்புகிறவர். நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே,  உங்களுக்குச் சித்திக்கிறதில்லை (யாக்கோபு 4:2) என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தரிடம் உங்கள் தேவைகளைக் கூறிவிடுங்கள். இரண்டு குருடர்களும் ஒருமித்து  ஆண்டவரே எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்று வேண்டுதல் செய்தார்கள்,  உடனே இயேசு மனதுருகி,  அவர்கள் கண்களைத் தொட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,  இயேசுவின் மனதுருக்கம் நம்மை வாழவைக்கும்,  அவருடைய ஒரு தொடுதல் நம்முடைய சரீரப் பிரகாரமும்,  ஆவிக்குரிய பிரகாரமும் பெரிய மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டுவரும். இரண்டு குருடர்களும் உடனே பார்வையடைந்து,  இயேசுவை பின்சென்றார்கள். அனேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில்,  நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றபின்பு கர்த்தரை மறந்துவிடுகிறோம். அவரை பின்செல்லுவதற்குப் பதிலாக,  அவரை விட்டு விலகிச்செல்கிறோம். இரண்டு குருடர்கள் இயேசுவை பின்சென்று நமக்கு முன்மாதிரியை வைத்தது போல,  இம்மைக்காய் மாத்திரமல்ல மறுமையிலும் அவரோடு வாழ,  அவருடைய பாதச் சுவடுகளை நாம் பின்பற்றும்படிக்கு நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *