அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைகட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ. நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய், தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்(2 இராஜா 9:1-3).
தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருவரையும் பல விதங்களில் அபிஷேகம் செய்கிறார். அவர் அபிஷேகம் செய்வதின் நோக்கம்; ஒவ்வொருவரும் அவருடைய திட்டத்தை நிறைவேற்றவேண்டும். வேதாகமத்தில் அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வேதத்தை வாசிக்கும் போது அறிந்துக்கோள்ளமுடியும். “சவுல்” அபிஷேகம் செய்யப்பட்டதின் நோக்கம்; அவன் அமலெக்கியர்களை அழிக்க வேண்டும்(1சாமு 15:3). “தாவீது” அபிஷேகம் செய்யப்பட்டதின் நோக்கம்; அவன் இஸ்ரவேல் எனும் மந்தையை மேய்க்க வேண்டும்(1சாமு 16:1). அப்போஸ்தலனாகிய “பவுல்” அபிஷேகம் செய்யப்பட்டதின் நோக்கம்; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் கர்த்தருடைய நாமத்தை அறிவிக்கவேண்டும், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடவேண்டும்(அப் 9:15,16). கர்த்தராகிய ஆண்டவர் கிறிஸ்துவை அபிஷேகம் செய்ததின் நோக்கம்; அவர் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்(லூக்கா 4:18) சித்தம் கொண்டிருந்தார். இப்படி கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக அபிஷேகம் செய்து வைத்திருந்தார்.
கர்த்தர் சேனாதிபதியாகிய “யெகூவை” இஸ்ரவேலுக்கு இராஜாவாக அபிஷேகம் செய்வதின் நோக்கமென்ன? யெகூ ஆகாபின் குடும்பத்தை அழித்துப்போட வேண்டும். ஏன் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தை அழித்துப்போட சொன்னார்? இவர்கள் கர்த்தரின் ஊழியக்காரரின் தீர்க்கதரிசிகளை கொலை செய்தவர்கள், அவருடைய எல்லா ஊழியக்காரர்களையும் கொலை செய்தார்கள். ஆகையால் கர்த்தர் இவர்களின் இரத்தப்பலியை, யேசபேலின் கையிலும், ஆகாப்பின் குடும்பத்தின் கையிலும் வாங்குவேன்( 2 இரா 9:7) என்று வைராக்கியம் கொண்டிருந்தார். யெகூ அபிஷேகம் செய்யப்பட்ட வேளையில்; அவன் தன் வில்லை நாணேற்றி, யேசபேலின் கிரியைகளை அழிக்க அதிவேகமாய் புறப்பட்டான்.
கர்த்தர் உன்னை அபிஷேகம் செய்ததின் நோக்கம்; நீ உன் ஜீவியத்தின் நடுவில் இருக்கின்ற யேசபேலின் கிரியைகளை அழிக்கவேண்டும். அந்த யேசபேலின் ஆவி சோரம்போகச் செய்து, கர்த்தரை விட்டுவழிவிலகச் செய்துவிடும். உன் ஜீவியத்தை நஷ்டப்படுத்தி உன்னை அழித்துவிடும். இப்படிப்பட்ட ஆவியை அழித்துப்போடுங்கள். யேசபேலின் ஆவி இஸ்ரவேல் ஜனங்களை சோரம்போக செய்து கர்த்தரை விட்டு வழிவிலகச் செய்தது. அவர்கள் கர்த்தரை சேவியாமல், பாகாலை சேவித்தார்கள். இந்த ஆவி அவர்களின் இருதயத்தை மயக்கி கெடுத்துப்போட்டது. யேகூ கர்த்தருக்காய் பக்திவைராக்கியமாய் எழும்பி, எல்லா பாகால் தீர்க்கதரிசிகளையும், சகல பணிவிடைக்காரர்களையும் ஆகாபுக்கு உண்டான சகலத்தையும் அழித்துப்போட்டான். யெகூ தேவனுடைய திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினான். இதனால் கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் (2 இரா 10:30) என்று வாக்குகொடுத்தார்.
கர்த்தருக்காய் பக்திவைராக்கியமாய் எழும்பும், நாட்கள் இதுவாய் காணப்படுகிறது. இப்படிப்பட்ட நாட்களிலே நாம் கர்த்தருக்காய் பக்திவைராக்கியமாய் எழும்பவேண்டும். அவருடைய அபிஷேகத்தைக்கொண்டு, உங்கள் நடுவில் இருக்கின்ற யேசபேலின் கிரியைகளையும், பாகாலின் வல்லைமைகளையும் அழித்துப்போடுங்கள். கர்த்தருடைய அபிஷேகம் சத்துருவின் கிரியைகளை அழிக்கவல்லமையுள்ளது. இந்த அபிஷேகத்தைக்கொண்டு யேசபேலின் ஆவிகளை ஜெயங்கொள்ளுங்கள். நீ ஜெயம்கொண்டால் கர்த்தர் உனக்கு சிங்காசனத்தை தருவார். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்(வெளி 3:21) என்று கர்த்தர் நமக்கு வாக்குபண்ணுவித்திருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீவதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David. P
Word of God Church
Doha – Qatar
http://www.wogim.org