2 கொரி 4:18. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EoDAsBNYGCo
விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட உணர்வு காணப்படுகிறது. மதிப்பில்லாத அநித்தியமானவைகளை பற்றியதா? இல்லை மதிப்புள்ள நித்யமானவைகளா?
குருடன் ஒருவனிடம் நூறு ரூபாயை கொடுத்தால் அதின் மதிப்பு தெரியாமல் ஒருவேளை குப்பையில் போட்டுவிடுவான். அதுபோல, இரண்டு வயது குழந்தையிடம் விலையுயர்ந்த பொருளை கொடுத்தால் அது என்னவென்று தெரியாமல் தூர தூக்கிப்போடும். காரணம் அந்த குழந்தை இன்னும் முதிர்ச்சியடையவில்லை.
இப்படித்தான் இந்த உலகத்தில் ஏராளமான கிருஸ்தவர்கள் விலையுயர்ந்த காரியங்களை குறித்து ஒரு வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறார்கள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாமல், ஒரு சரியான உணர்வில்லாமல் காணப்படுவதுண்டு. நல்ல உணர்வுகளை சரியான முறையில் யோசிக்காமல், செயல்படுத்தாமல் விட்டால், அந்த வாழ்க்கையே வீணாகிப்போய்விடும்.
இந்த உலகத்தில் இருக்கிற மனிதன் பிறக்கும்போது ஆவிக்குரிய குருடனாய் தான் காணப்படுகிறான். அவன் குருடனாகவே வளர்ந்து வருவதால் உன்னதத்துக்குரிய காரியங்களின் மேல் நோக்கமில்லாமல் உலகத்துக்குரிய காரியங்களையே சிந்தித்துக்கொள்பவனாக காணப்படுகிறான். அதனுடைய விளைவு, அவன் அதிகமாக செலவிடுகின்ற நேரமெல்லாம் உலகத்துக்குரிய ஐஸ்வரியங்களை குறித்தும், உலகத்துக்குரிய மரியாதையை குறித்தும், உலகத்துக்குரிய இன்பங்களை குறித்தும் மாத்திரமே தேடுகிறவனாக காணப்படுகிறான். இயேசு சொன்னார் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26 ) என்பதாக. இப்படி ஆவிக்குரிய கண்கள் குருடாகவே இருந்து, உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டு, நித்தியமானவைகளைக்குறித்து உணர்வில்லாமல் இருப்பவர்கள், ஒருநாளில் சர்வத்தையும் படைத்தவருக்கு முன்பாக நிற்கும் வேலை வரும். அப்பொழுது கர்த்தர் சொல்வார், நீ உலகத்தில் சம்பாதித்த அணைத்து மதிப்பில்லாத காரியங்கள், அவையெல்லாம் வீண் என்பதாக.
அநேக கிருஸ்தவர்கள் ரட்சிப்பை பெற்று, சந்தோசமாக பாடல்களெல்லாம் பாடி வந்தாலும் நித்யமானவைகளை குறித்து ஒரு வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், அவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களும் வீணாகிப்போய்விடும். அப்படிப்பட்ட கிருஸ்தவர்கள் ஒரு சிலர் சிந்திப்பதுண்டு ஏன் மற்ற விசுவாசிகளைப்போல நான் ஆவிக்குரிய சந்தோஷத்திலும், ஆவிக்குரிய ஆசிர்வாதங்களிலும் நான் பின்தங்கியுள்ளேன் என்பதாக. காரணம் அவர்கள் அநேக சுவிசேஷ கூட்டத்தில் கலந்துக்கொண்டாலும், அநேக சுவிசேஷ நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தாலும், உள்ளார்ந்த மனிதன் புதிதாக்கப்படவில்லை. இன்னும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாமல், மதிப்பில்லாத காரியங்களையே சிந்தித்துக்கொண்டிருப்பது தான்.
இப்படிப்பட்ட காணப்படுகிறவைகளாகிய அநித்தியமானவைகளை தேடாமல், காணப்படாத நித்யமானவைகளை குறித்த வாஞ்சை ஒவ்வொருவருக்கும் காணப்படட்டும். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உன்னதத்துக்குரிய ஆசிர்வாதத்தினால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org