உங்களைக்குறித்த கர்த்தருடைய நினைவுகள் மேலானது.

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 55:8

ஒவ்வொரு மனிதர்களும் தான் நினைக்கின்ற காரியங்கள் உடனடியாக நிறைவேறவேண்டும் என்று விரும்புகின்றார்கள். இதுதான் எல்லா மனிதர்களுடைய எதிர்பார்ப்பாய் காணப்படுகின்றது. அந்த காரியம் நிறைவேறினால் சந்தோஷப்படுகிறான். ஒருவேளை அது எதிர்பார்த்த நேரத்தில் நிறைவேறாமல்போனால் அதைக்குறித்து கவலைப்படுகிறான். சிலர் அதையே நினைத்து பெலவீனப்பட்டுவிடுகின்றார்கள்.
ஒவ்வோரு மனிதனுடைய வாழ்க்கையின் சந்தோஷமும், சமாதானமும் அவர்களை சுற்றி நடக்கின்றதான காரியங்களைப் பொருத்து மாறிக்கொண்டே இருக்கின்றது.

ஆனால் நம்முடைய தேவனோ நாம் எப்போதும் அவருக்குள் மகிழ்ந்திருக்க வேண்டுமென்று விரும்புகின்றார். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

நம்முடைய தேவன் சகலத்தையும் அறிந்தவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியும் செம்மையுமாய் செய்துமுடிப்பவரும் அவரே. உங்களைக்குறித்த அவருடைய நினைவுகள் மிகவும் பெரியது. அவருடைய வழிகள் ஆச்சர்யமானவைகள். உங்களுடைய வாழ்க்கையை அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்போது அவருடைய நினைவுகளை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவார்.
அவருடைய நினைவுகள் உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் மேலானவைகள்.
நீங்கள் அறியாததும் உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உங்களுக்கு செய்வார். உங்களைக்கொண்டும் செய்வார்.

பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசாயா 55:9) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகையால் அவருடைய நினைவுகளே உங்கள் வாழ்க்கையில் நிஜமாகட்டும், அவருடைய வழிகளே உங்கள் வாழ்க்கையில் வாய்க்கட்டும் என்று சொல்லி தேவனுடைய கரத்தில் உங்களை அர்ப்பணியுங்கள். அதுதான் உங்களுக்கு சமாதானமும், ஆசீர்வாதமுமாய்க் காணப்படும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.

Sam David .G
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *