அச்சாரம்:-

எபேசியர் 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

ஆவியானவர் நமக்கு அச்சாரமாயிருக்கிறார். ஆங்கில வேதாகமத்தில் அச்சாரம் என்றால் guarantee என்று எழுதப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் 500,000 ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் அந்த நிலத்தை வாங்குவதற்கு அடையாளமாக முதல் கட்டணமாக 50,000 ரூபாயை கொடுத்து அதற்குரிய ஒப்பந்தத்தில் மீத தொகையை மூன்று மாதங்களில் செலுத்துவதாக கையெழுத்து போடுகிறார். அவர் கொடுத்த அந்த 10% தொகை தான் அச்சாரம் அவர் அந்த நிலத்தை வாங்குவதற்கு. அப்படிதான் ஆவியானவர் நமக்கு முன்பாகவே அச்சாரமாய் கொடுக்கப்பட்டிருக்கிறார் நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளில் கிருஸ்துவைப்போல மாறவேண்டும் என்பதற்காக. ஒரே நாளில் கிறிஸ்துவை போல மாறிவிடமுடியுமா என்றால்; கண்டிப்பாக முடியாது. காரணம் நாம் பாவம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் அச்சாரமாய் இருக்கிறபடியினால் ஒவ்வொருநாளும் கிருஸ்துவுக்கேற்ற சுவாசத்தை நமக்குள்ளாக கொண்டுவருவார் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.

ஆவியென்னும் அச்சாரம் இல்லாத ஒருவனும் கிறிஸ்துவை போல மாற முடியாது. உலகத்தில் அநேகர் சன்மார்க்கமாய் வாழ முயற்சிசெய்தாலும், அவர்கள் ஆவியென்னும் அச்சாரத்தை குறித்து ஒரு தெளிவு, வெளிச்சம் இல்லாமல் இருப்பது ஒரு பரிதாபமான காரியமாகும். நமக்கு ஒரு சந்தோசம் என்னவென்றால் நமக்குள்ளாக ஆவியானவர் இருப்பது; அவர் நமக்கு அச்சாரமாயிருப்பது. நான் போவது நல்லது, தேற்றரவாளன் வருவார். அவர் வந்து எனக்குறியதிலிருந்து எடுத்து போதிப்பார் என்ற வாக்குத்தத்ததை இயேசு கொடுத்தார். அந்த வாக்குத்தத்தம் பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது மாத்திரமல்ல இன்றும் நம்மோடு கூட ஆவியானவர் அச்சாரமாய் காணப்படுகிறார்.

ஒரு இளம் வாலிபன் படித்து முடித்து வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு நிறுவனம் நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் அதற்கு முன்பணமாக ஒரு லட்சம் ரூபாயை செலுத்துங்கள் என்று சொல்லி அச்சாரமாய் செயல்பட்டார்கள். ஆனால் நடந்தது அந்த நிறுவனம் பணத்தை வாங்கி பின் நாட்களில் அந்த வாலிபனை ஏமாற்றி விட்டது. இப்படித்தான் உலகத்தில் அநேகர் அச்சாரமாய் இருப்பதை போல காணப்பட்டாலும் ஆவியானவர் என்னும் அச்சாரத்தை போல வேறொன்றும் காணப்பட முடியாது. அவரை உங்கள் இருதயத்தில் ஏற்று கொள்ளுங்கள். அவர் பிதாவின் ஆவியானவர்; கிறிஸ்துவின் ஆவியானவர்.

அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார் (II கொரிந்தியர் 1:22 ).

ஆவியானவர் உங்களுக்கு அச்சாரமாய் காணப்படட்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *