விடாய்த்தாலும் சத்துருவைப் பின்தொடருங்கள்.

கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது,அவனும் அவனோடிருந்த முந்நூறு பேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள் (நியா. 8:4).

மீதியானியர்களை முறியடித்து இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் கரங்களிலிருந்து விடுவிக்கும் படிக்குக் கர்த்தர் கிதியோனை தெரிந்துகொண்டார்.  கிதியோன், தன்னோடு காணப்பட்ட முந்நூறு பேரோடு யுத்தம் செய்து, மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேப்பையும், சேப்பையும் வீழ்த்தினார்கள். அதன்பின்பு அவர்கள் சோர்ந்த நிலையில் காணப்பட்டிருந்தும் கூட,  தப்பிச்சென்ற  சேபாவையும்,  சல்முனாவையும்,  அவர்களோடு காணப்பட்ட ஏறக்குறைய பதினாயிரம் பேரையும் பின்தொடர்ந்து போய் அவர்கள் மேல் யுத்தம் செய்து ஜெயம் கொண்டார்கள். விடாய்த்த வேளையில் சத்துருவைப் பின்தொடர்வதை விட்டுவிடாமல்,  பின்வாங்கிவிடாமல்,  தொடர்ந்துபோய் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,  நமக்கு ஒரு எதிரி உண்டு. உங்கள் எதிராளியாகிய பிசாசு என்று வேதம் அவனைச் சுட்டிக்காட்டுகிறது. அவனோடும்,  அவனுடைய சேனைகளோடும் நமக்கு ஒரு யுத்தம் காணப்படுகிறது. இந்த யுத்தத்தைக் குறித்த உணர்வு நமக்குள்ளாய் காணப்படுகிறதா? உங்கள் பிரச்சினைகளும்,பாடுகளும் உங்களை விடாய்த்துபோகும்படி செய்ததினால் சோர்ந்த நிலையில் காணப்படுகிறீர்களோ? நீங்கள் சத்துருவைப் பின்தொடர்ந்து சென்று அவனை வீழ்த்தும் படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்பதை மறந்துவிடாதிருங்கள்.  பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே மனுஷகுமாரன் பூமியில் வெளிப்பட்டார். இன்று அந்தப் பணியைக் கர்த்தர் உங்களை நம்பி உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். அவனுடைய திட்டங்களை மோப்பம் பிடித்து,  அவனுடைய செயல்களையும்,  கிரியைகளையும் இனங்கண்டு,  அவைகளை அழித்து முன்னேறுங்கள்.

கிதியோன் எதிரியின் சேனை பயமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை மடங்கடித்தான் (கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும்,  யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது,  அதை முறிய அடித்தான்.  சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள், அவனோ அவர்களைத் தொடர்ந்து,  சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து,  சேனை முழுவதையும் கலங்கடித்தான். நியாதிபதிகள் 8:11-12).   தேவ ஜனமே,பிசாசு உங்களைக் குறித்து பயமில்லை என்று நினைக்கிற அளவிற்கு இன்று நீங்கள் சோர்ந்து போய் காணப்படுகிறீர்களா? உங்களால் அவனுடைய இராஜ்யத்திற்கு பாதிப்பில்லை என்று கருதுகிற நிலையில் நீங்கள் வந்துவிட்டீர்களா? உற்சாகமடைந்து கர்த்தருக்காய் எழும்புங்கள்,  பெலனடைந்து எழும்புங்கள்,  கர்த்தருடைய புயமே எழும்பு என்று வேதம் உங்களை உற்சாகப்படுத்துகிறது. தூசியை உதறிவிட்டு எழும்பு,  கனநித்திரையை விட்டு எழும்பு என்று கர்த்தருடைய ஆவியானவர் உங்களை உற்சாகப்படுத்துகிறார்.

தாவீது சோர்ந்துபோகாமல் அமலேக்கியர்களைத் பின் தொடர்ந்து போனதினால், அவர்கள் கொள்ளையாடிக் கொண்டுபோன எல்லாவற்றிலும்,  ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான். நீங்கள் விடாய்த்துவிடாமல் எதிரியை பின்தொடந்தால் அவன் உங்களிடமிருந்து திருடின அத்தனைக் காரியங்களையும் நீங்கள் திருப்பிக்கொள்வீர்கள். உங்கள் ஐசுவரியங்களைத் திருப்பிக்கொள்வீர்கள்,  ஆரோக்கியத்தைத் திருப்பிக்கொள்வீர்கள்,  சமாதானத்தைத் திருப்பிக்கொள்வீர்கள்,  ஊழியத்தையும்,  ஆத்துமாக்களையும் திருப்பிக்கொள்வீர்கள். ஆகையால் சோந்துபோகாமால் எதிரியை பின்தொடர்ந்து,  அவனை மடங்கடித்து,  வெற்றிவாகை சூடுங்கள்.   

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *