சங்கீதம் 116: 12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
சங்கீதரக்காரனுடைய வாழ்க்கையில் மரணக்கட்டுகள் சூழ்ந்தது, பாதாள இடுக்கண்கள் அவனை பிடித்தது, இக்கட்டையும் சஞ்சலத்தையும் அவன் அடைந்தான். அவனுடைய ஆத்துமா விடுவிக்க கூடாததாயிருந்தது. அவனுடைய ஆத்துமா மரணத்துக்கும், அவனுடைய கண் கண்ணீருக்கும், அவனுடைய கால் இடறுத்தலுக்குமாய் இருந்தது. அவன் மிகுதியாய் வருத்தப்பட்டான். எல்லா மனுஷரும் பொய் பேசுகிறவர்களாய் இருக்கிறார்களே என்று மனக்கிலேசம் அடைந்தான். இப்படிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் இருந்து ஆண்டவர் அவனை தப்புவித்தார். அவனால் இந்த சூழ்நிலைகளை எதிர் கொள்ளமுடியாமல் இருக்கும்போது கர்த்தரிடம் உதவியை கேட்டான். அவர் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிருந்து அவனுக்கு உதவி செய்தார்.
ஆகையால் தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான் கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் என்பதாக. அவன் இந்த கேள்வியை கேட்டு அவனே அடுத்த வசனத்தில் பதிலையும் சொல்லுகிறான். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் என்பதாக.
இந்த வருடம் முழுவதுமாக எத்தனையோ மரண கண்ணிகள் நம் கண் முன்பாக காணப்பட்டது. எத்தனையோ இக்கட்டுகள் நேர்ந்தது. சஞ்சலம் வந்தது. வேதனை வந்தது. ஆனால் கர்த்தர் இவை எல்லாவற்றிலுமிருந்து நம்மை பாதுகாத்தார். பஞ்ச காலத்திலும் கர்த்தர் நம்மை போஷித்தார். நம்முடைய குடும்பங்களையும் பிள்ளைகளையும் நடத்தினார். வேலையில் அவர் கரம் கூட இருந்தது. சோர்வை மாற்றினார். கண்ணீரை துடைத்தார். நீ என்னுடையவன் என்று சொல்லி ஆறுதல் படுத்தினார். கலங்காதே என்று சொல்லி கண்ணீரை துடைத்தார். வழி தெரியாமல் இருந்த போது கரம் பிடித்து நடத்தினார். அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நாம் என்ன செய்ய போகிறோம்.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதி 28:20 ) என்று வசனம் சொல்லுகிறது. உண்மையாகவே எஞ்சி உள்ள நாட்களில் நான் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து செல்வேன். இயேசுவை அறியாதவர்களுக்கு அவர் ஒவ்வொருவருக்காகவும் மரித்து உயிர்த்ததை சொல்வேன் என்று சொல்வீர்களாகில் நீங்கள் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org