நீதி 14 : 12. மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
இதே வசனம் மீண்டுமாக நீதி 16 : 25லும் எழுதியிருக்கிறது. ஒருவேளை முதல் முறை வாசிக்கும்போது கவனக்குறைவால் நாம் விட்டுவிட்டால் இரண்டாவது முறை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே மீண்டும் இதே வசனத்தை பார்க்கமுடியும். உங்களுடைய பார்வைக்கு நல்லதாக தோன்றுகிற ஒரு சில காரியங்கள் ஆண்டவருடைய பார்வைக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அநேக வேளைகளில் நாம் ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக இது ஆண்டவருக்கு சித்தமா இல்லையா என்று கண்டறியாமல் நாம் நாமாகவே தீர்மானம் எடுத்துவிடுகிறோம். காரணம் நாம் நினைக்கிறோம் நமக்கு எல்லாம் தெறியும் என்பதாக. காலம் கடந்து சென்றபின்பு பின் நாட்களில் நாம் எடுத்த தீர்மானம் சரியில்லை என்பதை உணர்ந்த பிறகு என் வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேனே என்று சொல்லி கலங்குகிறவர்களாக மாறிவிடுகிறோம். ஞானமுள்ள காரியம் என்னவென்றால் நாம் நம்மை தாழ்த்தி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன், நான் உம்முடைய ஞானம் வெளிப்படுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன் என்று சொல்வதே நல்ல குணமாகும். ஆவியானவரே நீர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்தாமல் இருந்தால் நான் முட்டாளாகவே இருப்பேன் என்பதை அவருடைய சந்நிதானத்தில் ஒப்புக்கொள்வது ஒரு நல்ல குணாதிசயமாகும்.
ஆண்டவர் சொல்லுகிறார் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது ( ஏசாயா 55 : 8 , 9 ) என்பதாக. யோசேப்பு அடிமையாக போய்விட்டான் என்று மனுஷன் நினைத்திருக்கலாம், ஆனால் ஆண்டவருடைய கண்கள் அவனை முழு தேசத்துக்கும் அதிபதியாக கண்டது. தாவீதை ஆட்டிடையனாக, இளையவன் என்று அவன் தகப்பன் பார்த்திருக்கலாம், ஆனால் ஆண்டவருடைய கண்கள் அவனை சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக கண்டது. எஸ்தரை அடிமை பெண்ணென்று எல்லாரும் கருதியிருக்கலாம், ஆனால் ஆண்டவருடைய திட்டம் அவளை நூற்றிப்பத்தேழு நாடுகளுக்கும் ராஜாத்தியாக கண்டது.
உங்கள் வாழ்க்கையை ஆண்டவருடைய திட்டத்திற்கு விட்டுக்கொடுங்கள். ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது ( பிரசங்கி 7:8 ) என்று பிரசங்கி சொல்லுவதை பார்க்க முடியும். அவர் முடிவை துவக்கத்திலிருந்தும், துவக்கத்தை முடிவிலிருந்தும் பார்க்கிறவர். காரணம் அவர் நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் என்று சொன்னவர். மாத்திரமல்ல நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் என்று சொன்னவர். ஆகையால் எந்த தீர்மானமாயிருந்தாலும் மனுஷனுடைய பார்வைக்கு நல்லதாயிருக்கிறதா என்று பார்க்காமல் இது தேவனுடைய சித்தமா என்று பார்த்து தீர்மானம் எடுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org