இயேசுவின் பிறப்பை முன்னறிந்த நான்கு பிரிவினர்கள்:-

லூக்கா 2 : 10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

ஒரு நற்செய்தி இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக கன்னியின் வயிற்றில் பிறந்தார். இந்த நற்செய்தியை ஆண்டவர் நான்கு பிரிவை சார்ந்த ஜனங்களுக்கு இயேசு பிறப்பதற்கு முன்பாகவே வெளிப்படுத்தினார். முதலாவது மேய்ப்பர்கள், இரண்டாவது சாஸ்திரிகள், மூன்றாவது ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்த சிமியோன், நான்காவதாக அன்னாள் என்னும் தீர்க்கதரிசி.

இந்த நான்கு பேரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள், வெவ்வேறு வயதை சேர்ந்தவர்கள், வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் எல்லாரும் ஆண்டவருக்கு பயந்தவர்கள். இப்படிப்பட்ட ஜனங்களை ஆண்டவர் இந்த கடைசி நாட்களிலும் அவருடைய இரண்டாவது வருகைக்கு முன்பதாக எழுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இவற்றில் சுவாரஸ்யமான காரியமென்னவென்றால் நான்கில் மூன்று பிரிவினர் இரவில் அதிகமாக செயல்பட்டவர்கள். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். சாஸ்திரிகள் இரவிலே நட்சத்திரத்தை பார்த்து பயணம் செய்தார்கள்; காரணம் பகலில் நட்சத்திரம் கண்களுக்கு தெரியாது. எண்பத்துநாலு வயதுள்ள அந்த அன்னாள் என்னும் விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். இந்நாட்களிலும் இமைக்கு தூக்கத்தை வரவொட்டாமல் ராத்திரியிலே விழித்திருந்து கர்த்தருக்காக காத்திருப்பவர்களுக்கு ஆண்டவர் வெளிப்பாடுகளை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஈவான் ராபர்ட்ஸ் வேல்ஸ் தேச எழுப்பதலுக்கு இரவெல்லாம் கர்த்தரை நோக்கி ஜெபித்துக்கொண்டே இருந்ததாக சரித்திரம் சொல்லுகிறது. எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது விழித்திருந்து ஜெபிக்கும்போது ஆண்டவர் மறைவான காரியங்களை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

இயேசுவின் பிறப்பை நினைவுகூருகிற இந்நாட்களில், இந்த நற்செய்தி எல்லாருக்கும் கடந்து செல்லவேண்டும், உலக ரட்சகரை எல்லாரும் அறிந்துகொள்ளவேண்டுமென்று இரவில் கண்விழித்து ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *