இரட்சிக்கப்படுவதற்காகவே இயேசுவை அனுப்பினார்:-

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய வார்த்தை என்னும் இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இந்த ஒரு உயர்ந்த தீர்மானம் பிதாவால் எப்பொழுது எதற்காக எடுக்கப்பட்டது. நம்முடைய ஆதிபெற்றோர்களாகிய ஆதாமும் ஏவாளும் சர்ப்பதினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுந்தார்கள். தேவன் மனுக்குலத்தின் மீது வைத்த உயரிய திட்டத்தை சர்ப்பம் வஞ்சித்துவிட்டது. எப்பொழுது ஆதாமும் ஏவாளும் புசிக்கக்கூடாத கனியை புசித்து பாவத்தை சம்பாத்திக்கொண்டார்களோ அப்பொழுது பிதாவால் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. என்ன தீர்மானம் ? வசனம் சொல்லுகிறது உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் ( ஆதி 3 : 15 ).

சர்ப்பத்தின் தலையை நசுக்கும்படியாக தேவகுமாரன் மனுஷகுமாரனாக இந்த பூலோகத்தில் பிறந்தார். எப்படி அவர் சர்ப்பத்தின் தலையை நசுக்கினார்? மனிதர்களை இரட்சித்துக்கொள்வதன் மூலமாக தான். மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார் (மத் 8 : 11 ), இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார் ( லுக் 19 : 10 ). அந்த இரட்சிப்பு அவருடைய பிறப்பினால் ஆரம்பமானாலும் அது நிறைவேறியது கல்வாரி சிலுவையில். சிமியோன் இயேசுவை பார்த்தபிறகு மரியாளை பார்த்து தீர்க்கதரிசனமாக சொன்னான் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான் ( லுக் 2 : 35 ) எனபதாக. அந்த வார்த்தையின்படியே மரியாளுடைய ஆத்துமாவை பட்டயம் உருவிபோயிற்று. இயேசு கொல்கதா மலையில் நாமெல்லோருக்கும் சிலுவையில் ரத்தம் சொட்ட சொட்ட, முகநாடிகளெல்லாம் வேறுபட்டு, பார்க்கக்கூடிய ரூபம் இல்லாமல் எல்லா நிந்தனைகளையும் அவமானங்களையும் சகித்து இரட்சிப்பை இலவசமாக நமக்கு சம்பாதித்துப்போனார்.

இயேசுவின் பிறப்பை நினைவுகூருகிற நாட்களில் பிதாவின் அன்பை நினைவுகூரவும் மறந்துவிடாதிருங்கள். ஒரு ஊழியக்காரனுக்கு திருமணம் ஆகி அநேக நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தார்கள். கர்த்தருடைய கிருபையால் நீண்ட வருடங்களுக்கு பின்பு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஒரு நாள் இரவு அந்த ஊழியக்காரன் உறங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு மோசமான சொப்பனத்தை கண்டான். அதில் அவன் நீண்ட நாள் காத்திருந்து பெற்ற குழந்தை ஒரு கோரமான வியாதியால் மரித்துப்போவதை போல சொப்பனத்தை கண்டான். இதினால் அவன் நடு ராத்திரியில் திடுக்கிட்டு எழுந்திருந்து ஒரே கலக்கமும் பயமும் திகிலும் அடைந்தவனாக அழுதுகொண்டிருந்தான். இந்த வேதனையோடு அவன் தன் அறையில் சென்று கதறி கதறி ஆண்டவரை பார்த்து ஏன் எனக்கு இப்படி சொப்பனம் வந்தது என்று சொல்லி அழுது கேட்டான். அப்பொழுது ஆண்டவர் அவனுக்கு ஆவியானவரால் உணர்த்தினார்; மகனே இது போல தான் என்னுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை சிலுவையில் அறிய ஒப்புக்கொடுக்கும்போது என் உள்ளம் துடித்தது. அந்த வேதனையால் என் இருதயம் கலங்கியது. ஆகிலும் நான் அதை விட்டுக்கொடுத்தேன்; காரணம் நான் உன் மீதும் இந்த மனுக்குலத்தின் மீதும் வைத்த அன்பினிமித்தமாகவே. இதை நீ விளங்கிக்கொள்ளுவதற்காகவே இந்த சொப்பனத்தை உனக்கு அனுமதித்தேன் என்பதாக. ஆம் நம்முடைய பிதா நம் மீது வைத்த அன்பும், இயேசு நம் மீது வைத்த கிருபையும், ஆவியானவரின் ஐக்கியத்தையும் விவரிக்கமுடியாதது.

உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் தன்னுடைய குமாரனை இந்த உலகத்தில் அனுப்பினார். இந்த நற்செய்தியை எல்லாருக்கும் அறிவியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *