யோவா 1 : 9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
ஆதியிலே வார்த்தையாக இருந்தவர் இயேசுவாக இந்த உலகத்தில் வந்தார். அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அவர் ஒளியாயிருந்தார் அதுவும் சாதாரண ஒளி அல்ல; மெய்யான ஒளியாயிருந்தார். இருண்ட காலத்திலிருந்த ஜனங்களுடைய வாழ்க்கை இருளாகவே இருந்தது. வாழ்க்கை முழுவதும் சமாதானமின்மை, பாவத்தின் அடிமைத்தனம், கசப்பும் வெறுப்புமாக இருந்த அந்த இருண்ட நாட்களில், இயேசு இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை அடையும்படி நீதியின் சூரியனாக இந்த உலகத்தில் வந்தார்.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. வெளிச்சம் எப்பொழுதும் இருளை அகற்றிவிடும், அதுபோல தான் இயேசு இருந்த இடங்களில் இருள் அகன்றுபோனது. இன்றும் அந்த மெய்யான ஒளியாகிய இயேசு உங்கள் உள்ளத்தில் பிறப்பாரேயென்றால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருள் அகன்றுவிடும். ஒரு அறையை முழுவதுமாக அங்கே இருக்கும் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைந்துவிட்டால் அந்த அறை முழுவதும் இருளாக இருக்கும். வெளியே சூரிய வெளிச்சம் இருந்தாலும், அறை முழுவதும் பூட்டப்பட்டதாயிருக்கும்போது மிகவும் இருளாகவே இருக்கும். ஆனால் ஒரு சிறிய துவாரமோ, ஒரு சிறிய இடைவெளியே அந்த ஜன்னல்களிலோ, கதவுகளிலோ இருக்குமென்றால், வெளியே இருக்கும் வெளிச்சம் அந்த அறைக்குள் ஊடுருவிச்செல்லும். அது போல தான் இயேசுவும் உங்கள் உள்ளத்தில் பிறக்கவேண்டுமென்று வாசற்படியில் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் உள்ளத்தில் பிறக்க இடம் கொடுங்கள். யோவானும் அந்த ஒளியாகிய இயேசுவைக்குறித்து சாட்சிகொடுத்தான்.
பழைய ஏற்பாடு காலத்தில் உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது ( சங் 119 : 105 ) என்று எழுதப்பட்டிருக்கிறது. அதே வேளையில் இப்பொழுது அந்த வார்த்தையாகிய இயேசுவே நமக்கு வெளிச்சமாயிருக்கிறார், ஒளியாயிருக்கிறார். அந்த ஒளி எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும்; எந்த இருதயத்தையும் கரையச்செய்யும். யாரும் யாரையும் இந்த மனுசனெல்லாம் ஒருபோதும் இயேசுவை ஏற்றுக்கொள்ளமாட்டான்; அவன் ஒரு தீவிர சினிமா பைத்தியம், தீவிர மத வெறிபிடிச்சவன், தீவிர கொலைபாதகன், தீவிர திருட்டு வேலை செய்கிறவன், பெரிய துன்மார்க்கன், பெரிய மதுபான ஆலைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறவன், குடிக்கு அடைமையானவன்; ஆகையால் இவனெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை என்று சொல்லவே முடியாது. அவன் எப்பேர்ப்பட்ட நபராக இருந்தாலும் மெய்யான ஒளியாகிய இயேசு அவனை சந்திப்பாரென்றால், அந்தநேரமே அவனுடைய வாழ்க்கையில் இருக்கிற இருள் நீங்கி பிரகாசமைடையும். நம் இயேசு ராஜாவின் இருதயங்களை நீர்க்கால்களை போல திருப்புகிறவர் என்றும் வேதம் சொல்லுகிறது.
இயேசுவின் பிறப்பை நினைவுகூருகிற இந்நாட்களில் அந்த மெய்யான ஒளி ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்கவேண்டுமென்று பிரார்த்திப்போம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org