சங் 13 : 6. கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
இந்த சங்கீதத்தில் தாவீது முதல் நான்கு வசனத்தில் அவனுடைய துயரத்தை ஆண்டவரிடம் முறையிடுகிறவனாக காணப்படுகிறான். தாவீது கடந்து சென்ற நெருக்கமான காலத்தில் ஆண்டவர் அவனை மறந்தார் போலவும், எதுவரைக்கும் நீர் என்னை மறப்பீர் என்றும் அவன் கேள்விகளை எழுப்புகிறான். அநேக வேளைகளில் நாமும் கூட இப்படி தான் ஆண்டவரை பார்த்து எனக்கு ஏன் இப்படி விரும்பத்தகாத காரியங்கள் சம்பவிக்கிறது, ஆண்டவர் என்னை மறந்துவிட்டாரோ என்று கேள்விகளை எழுப்புகிறவர்களாய் இருக்கிறோம். மாத்திமல்ல அவன் நித்தமும் சஞ்சலத்தால் நிறைந்திருப்பவனாகவும், அவனுக்கு விரோதமாக சத்துருக்கள் தங்கள் தலைகளை உயர்திகிறார்களென்றும் முறையிடுகிறான். இந்த வருடத்திலும் ஒரு சில பற்றாக்குறைகளை நாம் சந்தித்திருக்கக்கூடும், உங்களுக்கு விரோதமாக வேலைஸ்தலங்களில் குடும்பங்களில் யாரவது எழும்பியிருக்கலாம். அடுத்ததாக தாவீது தான் மரண நித்திரை அடைகிறவனைப்போல காணப்படுவதாக சொல்லுகிறான். இந்த வருடத்தில் கொடுமையான கொள்ளைநோயால், அநேகர் அவதிப்பட்டும், கலங்கியுமிருக்கலாம்; மரண நித்திரையை கடந்து வருவதுபோல சூழ்நிலைகளை சந்தித்திருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது சொல்லுகிறான் நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் ( சங் 13 : 5 ) என்பதாக கர்த்தர் மேல் தன்னுடைய விசுவாசத்தை, நம்பிக்கையை வைக்கிறவனாக காணப்படுகிறான். கர்த்தரை அறியாதவர்கள் தொடங்கி, பின் வாங்கி போனவர்கள், பெயர் கிருஸ்துவர்கள் என்று அநேகர் இந்த வருடத்தில் தங்கள் நம்பிக்கையை கர்த்தர் மேல் வைக்க ஆரம்பித்தார்கள். திருச்சபைக்கு இதுவரைக்கும் செல்லாதவர்கள், இந்த வருஷத்தில் சபைக்கு செல்ல ஆவல் கொண்டார்கள். அநேக மனமாற்றங்கள்; இதுவரை ஜெபிக்கத்தவர்கள் மணிக்கணக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள்; இயேசுவை பற்றி அறியாதவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்; புள்ளி விவரத்தின் படி அநேகர் வேதாகமத்தை பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தார்கள்; கர்த்தர் மேல் ஒரு பயபக்தி அநேகருக்கு வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கமான காலங்களை கடந்து தாவீது கடைசியில் சொல்லுகிறான் கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன் என்பதாக. இன்று நாம் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் சொல்லுகிறார்கள் இந்த வருடம் துரதிஷ்ட வருடம் அடுத்த வருடமும் இப்படியே துரதிஷ்டமாக இருக்கும் என்று எதிர்மறையான கருத்துக்களை, சிந்தைகளை பரப்புகிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பேரழிவிலும் கர்த்தர் அவருடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து பாதுகாத்தார். இனிமேலும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க அவர் போதுமானவராக இருக்கிறார். நமக்குள்ளாக ஒரு நன்றி நிறைந்த இருதயம் தாவீதை போல காணப்படட்டும். கர்த்தர் எனக்கும் என் குடும்பத்துக்கு போதுமானவராக இருந்தபடியால் கர்த்தரை பாடுவேன் என்று சொல்லுபவர்களாக காணப்படுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் இருதயத்தை சோதித்தறிந்து வருகிற வருடங்களில் ஆசிர்வதிப்பவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org