2 கொரி 4 : 15. தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
தேவனுடைய மகிமை, கிருபை மற்றும் ஸ்தோத்திரம் இவைகள் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு தேவமகிமை வெளிப்படவேண்டுமென்றால், கிருபை வேண்டும். அந்த கிருபை உங்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் ஸ்தோத்திரங்கள் ஏறெடுக்கவேண்டும். இன்னும் வேறு விதத்தில் சொல்லவேண்டுமென்றால் யார் யாரெல்லாம் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான கிருபை கிடைக்கும். அப்படி கிருபையை பெற்றவர்கள் தேவமகிமையை காண்பார்கள். ஆனபடியால் அடித்தளம் நீங்கள் செலுத்துகிற ஸ்தோத்திரபலிகளினாலேயே இருக்கிறது.
சங்கீதக்காரனாகிய தாவீது சொல்லுகிறான் உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன் ( சங் 119 : 164 ) என்பதாக. அதேவேளையில் அவன் சொல்லுகிறான் அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார் (சங் 55 : 17 ) என்பதாகவும். அவன் ஒரு நாளில் ஏழு முறை துதிப்பவனாகவும், மூன்று முறை அதாவது காலை மதியம் மாலை விண்ணப்பங்களை ஏறெடுப்பவனாகவும் காணப்படுகிறான். அவன் ஆண்டவரோடுகூட அவனுடைய நேரத்தை செலவழித்த விகிதம் 7 : 3 அதாவது 70% துதியும் ஸ்தோத்திரமும் ஆராதனையுமாகவும் 30% தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறவனாகவும் காணப்பட்டான். இந்த விகிதத்தை நாமும் கடைபிடித்தால் வேதத்தின்படி நல்லது. ஒரு சிலர் ஜெபிக்க ஆரம்பித்தால் முழுவதும் வேண்டுதல்களும் விண்ணப்பங்களுமாகவே இருக்கும். கர்த்தரை துதிப்பதும், அவருக்கு ஸ்தோத்திரபலிகளை செலுத்துவதும், ஆராதிப்பதும் அவர்கள் ஜெபங்களில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மணி நேரம் ஜெபிப்பீர்களென்றால் அவற்றில் நாற்பது நிமிடம் நன்றாக அவரை துதித்து ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து அவரை ஆராதித்துவிட்டு, மீதமுள்ள இருபது நிமிடங்கள் விண்ணப்பங்களை ஏறெடுப்பது நல்லது.
இன்னும் சங்கீதக்காரன் சொல்லுகிறான் கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் (சங்கீதம் 34:1 ) என்பதாக. எல்லா சூழ்நிலையிலும் அவரை துதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
வருடத்தின் கடைசியில் வந்திருக்கும் ஒவ்வொருவரும் கர்த்தர் செய்தவற்றையெல்லாம் நினைத்து ஸ்தோத்திரங்களை ஏறெடுங்கள். இப்படி அநேகர் ஒரு கிராமத்திலோ, பட்டணத்திலோ ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும்போது அந்த கிராமத்தில் பட்டணத்தில் தேவ கிருபையை பெருகும். அதனுடைய விளைவு அந்த கிராமமோ இல்லை பட்டணமோ தேவ மகிமையை காணும். ஆகையால் ஸ்தோத்திரங்கள் பெருகட்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org