1 தீமோ 2 :1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதும்போது குறிப்பிட்ட ஒரு வார்த்தை அதுவும் பிரதானமாய் அவனுக்கு ஒரு புத்தியை சொல்லுகிறவனாக காணப்படுகிறான். இந்த வசனத்தில் எல்லா மனுஷருக்காகவும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஒரு சிலர் கேட்கலாம் என்ன இது முட்டாள் தனமாக இருக்கிறது துரோகம் செய்தவர்களுக்கும், உபாத்திரவப்படுத்தினவர்களுக்கும் ஜெபிக்க வேண்டுமா ? அதுவும் அவர்களுக்காக ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கவேண்டுமென்று சொல்லுவது அதிமுட்டாள்தனமாக இருக்கிறது; அப்படி யார் தான் செய்ய முடியும் என்பதாக. வேதம் காட்டுகிற வெளிச்சம் என்னவெனில் எல்லா மனுஷருக்காகவும் நாம் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க வேண்டும் என்பதாக.
ஆண்டவர் இங்கே எதிர்பார்ப்பது கர்த்தாவே என்னை காயப்படுத்தினவர்களுக்காக, என்னை துன்பப்படுத்தினவர்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்ல வேண்டும். காரணம் வசனம் சொல்லுகிறது அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8 : 28 ) என்பதாக. பவுல் இந்த வார்த்தையை கடிதம் மூலமாக எழுதும்போது ரோமாபுரியை ஆண்டவன் நீரோ என்ற கொடுங்கோல் மன்னன். ரோம பேரரசர்களில் மிகவும் கொடுமையான ஒரு மன்னன் இவன்; இவன் காலத்தில் அதிகமான கிருஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள்; உயிரோடு எரிக்க பட்டர்கள்; சிங்கங்களின் வாய்களுக்கு இறையானார்கள்; இப்படி அநேக கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துகிறவனாக இவன் காணப்பட்டான். மாத்திரமல்ல பவுலின் தலையை சிரச்சேதம் பண்ணுவித்தவனும் இவனே. இப்படிப்பட்டதான கொடுமையான அரசாங்கம் செயல்பட்ட நேரத்தில் பவுல் மூலமாக ஆவியானவர் சொல்லுகிறது எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்துங்கள் என்பதாக.
இந்த வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் வந்த எல்லா நபர்களுக்காகவும் நினைவுகூர்ந்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள். உங்கள் வேலை பறிபோனதற்கு ஒரு நபர் காரணமாக இருக்கலாம், அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஒரு நபர் மூலமாக தொழிலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஒரு நபர் பணத்தை வாங்கி ஏமாற்றியிருக்கலாம், அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஒரு நபர் உங்கள் மனது புண்படும்படியாக இழிவாக பேசியிருக்கலாம், அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஒரு நபர் உங்களை தாக்கியிருக்கலாம் அடித்திருக்கலாம் ஏன் காரி துப்பி இருக்கலாம், அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். வேலை ஸ்தலங்களில் ஒருவர் உங்கள் சம்பளம் குறைக்கப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம், அவருக்காக ஸ்தோத்திரம் செலுத்துங்கள்; காரணம் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
எல்லாவற்றிற்க்காகவும் எல்லாருக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்துங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக (I பேதுரு 1:3 ) என்று சொல்லுகிறவர்களாக காணப்படுவோம். கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (II கொரிந்தியர் 2:14 ) என்று சொல்லுகிறவர்களாக காணப்படுவோம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org