எசேக். 10 : 20. இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
ஏசாயா சேராபீன்களை பார்த்தான்; எசேக்கியேல் தீர்க்கதரிசி கேரூபீன்களை பார்த்தான். சேராபீன்களுக்கு ஆறு செட்டைகளும், கேரூபீன்களுக்கு நான்கு செட்டைகளும் உண்டு. சேராபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலாகவும், கேரூபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு கீழாகவும் காணப்படுகிறார்கள். எசேக்கியேல் முதல் அதிரகாரத்தை வாசிக்கும்போது கேரூபீன்களை குறித்து வாசிக்கலாம். கேரூபீன்கள் ஜீவ விருட்சத்தை காவல் காத்துக்கொண்டிருந்ததை ஆதாம் பார்த்தான்.
ஆனால், வித்தியாசமான காரியமென்னவென்றால் கேரூபீன்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின்கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
பிரிக்கமுடியாத ஒன்றோடொன்று இணைக்கப்பட்டபடி தேவதூதரின் வரிசையை சிந்தித்து பாருங்கள். நாமும் சபையில் இந்த கேரூபீன்களை போல இணைக்கப்பட்டபடி வேற்றுமையில்லாமல் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகின்றார்.
கேரூபீன்களின் இந்த நான்கு முகங்கள் இயேசுவை வெளிப்படுத்துவதாக வேதவல்லுனர்கள் சொல்லுகிறார்கள். மனிதமுகம் இயேசுவின் மனிதத்தன்மையையும், சிங்கமுகம் அவருடைய அதிகாரத்தையும், எருதுமுகம் சிலுவையில் இயேசு செய்த தியாகத்தையும், கழுகுமுகம் அவருடைய தெய்வீகத்தையும் குறிப்பதாக சொல்லுகிறார்கள்.
இந்த கேரூபீன்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான காரியமென்னவென்றால் வசனம் சொல்கிறது அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை ( எசேக்கி 1 : 12 ) என்பதாக. அதாவது கேரூபீன்கள் பரிசுத்த ஆவியானவரை எப்பொழுதும் தொடர்ந்து சென்றார்கள். அதே போலத்தான் நாமும் கூட எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரை தொடர்ந்து செல்பவர்களாய் காணப்பட வேண்டும். அவர் போகிற இடத்துக்கு போக வேண்டும். அவர் போகாத இடத்துக்கு போகக்கூடாது. இதை கர்த்தருடைய பிள்ளைகள் கேரூபீன்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
மாத்திரமல்ல இந்த கேரூபீன்கள் மின்னலைப்போல பற்றியெரியும் நெருப்பை போன்ற நிறம் உடையவர்கள். மாத்திரமல்ல கேரூபீன்கள் முன்னால் சென்றபோது, இதுவரை கேட்டிராத பெரும் இரைச்சலை எசேக்கியேல் கேட்டான். அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன ( எசேக்கி 1 : 24 ).
ஒரு மகத்தான காட்சியை எசேக்கியேல் பார்க்கிறான். மேல் செட்டைகள் இணைக்கப்பட்டிருக்க, கீழ் செட்டைகள் உடம்பை மூடிக்கொள்ள, அக்கினி சக்கரங்களின் மேல் நின்று, எல்லா திசைகளிலும் பார்க்கக்கூடிய கண்களுடன், ஆயிரக்கணக்கான கேரூபீன்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிற காட்சியை எசேக்கியேல் பார்த்து பிரமித்துப்போனான்.
இந்த காட்சிக்கு மேலே சர்வ வல்லமையுள்ள தேவன்.
இப்படிப்பட்ட கேரூபீன்கள் சேராபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறவர் மனிதகுலமாகிய நம் மத்தியில் வாசம் செய்ய வேண்டுமென்று விருப்பமுடையவராய் காணப்படுவது ஒரு பெரிய ஈவாக காணப்படுகிறது.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org