யூதா 9 : பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளுவாராக என்று சொன்னான்.
வேதத்தில் பிரதான தூதர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மூன்று பேர். அதில் மிகாவேல் மற்றும் காபிரியேலுக்கு மாத்திரம் தேவன் என்ற அர்த்தமுள்ள ‘el’ என்று அவர்கள் பெயர்கள் முடிகிறது. பழைய பாம்பாகிய லூசிபருக்கு இந்த அடைமொழி கொடுக்கப்படவில்லை.
மிகாவேலின் முக்கியமான பொறுப்பு தேவ ஜனங்களை பாதுகாப்பதும், அவர்களின் குறை தீர்ப்பதுமேயாகும்.
மிகாவேல் ஒரு பிராதான தூதன், இஸ்ரவேலுக்கு பாதுகாப்பை கொடுக்கும்படி கர்த்தரால் அனுப்பிவிடப்பட்டவன், நேரடியாக சாத்தானை எதிர்த்து நிற்பவன், கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளுவாராக என்று சாத்தானை பார்த்து சொல்லி கர்த்தரை சார்ந்து கொள்பவன், யுத்த சேனைகளை உடையவன், சாத்தானை எதிர்த்து யுத்தம் செய்பவன்.
மோசேயின் சரீரம் புதைக்கப்பட்ட இடத்தைக் குறித்து சாத்தான், பிரதான தூதனாகிய மிகாவேலோடு தர்க்கம் செய்துகொண்டிருந்தான். ஒருவேளை சாத்தான் நினைத்திருக்கலாம் அந்த மோசேயின் கல்லறை இருக்கும் இடம் தெரிந்தால் அங்கே மோசேயை விக்கிரகமாக மாற்றி, அவனை ஜனங்கள் வணங்கும்படி செய்து, ஜனங்களை பாதாளத்து அழைத்து செல்லலாமென்று. ஆனால் மிகாவேல் தூதன் கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளுவாராக என்று சொன்னான்.
மிகாவேல் தூதன் யுத்தம் செய்கிறவன். பெர்சிய ராஜ்யத்தின் அதிபதி சுமார் மூன்று வாரங்கள் காபிரியேல் தூதரிடம் தர்கித்து கொண்டிருக்கையில் மிகாவேல் தூதன் உதவிக்காக வந்தான் என்று தானி 10 : 9ல் வாசிக்கலாம். தூதன் ஒருவனுக்கு ஒரு பிரச்சனையென்றால் மற்ற தூதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளுகிறார்கள். இப்படி தான் தேவ பிள்ளைகளாகிய நாம் சபையிலுள்ள நம்முடைய சகோதரர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் உதவி செய்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
மாத்திரமல்ல, வானத்தில் நடக்கப்போகும் யுத்தத்தில், பிரதான தூதனாகிய மிகாவேலுக்கு முக்கிய பங்கு உண்டு. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று (வெளி 12 :7,8). ஒருநாளில் தேவனின் தூதர்களுக்கும், சாத்தானுடைய தூதர்களுக்கும் யுத்தம் நடக்கப்போகிறது. இந்த வசனத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் என்று குறிப்பிடப்பட்டவர்கள், அவர்கள் அவனை போன்ற தகுதியை உடையவர்கள், பூமியின் காரியத்தை கட்டுப்படுத்த ஏற்பட்ட போரில், அவர்கள் அவனுக்கு உதவி செய்கிறவர்கள்.
உங்களுக்கு ஒரு பிரச்சனைகள், போராட்டங்கள் வருகிறதென்றால் உங்களுக்காக மிகாவேல் போன்ற தூதர்களை கர்த்தர் பாதுகாக்க வைத்திருக்கிறார்; உங்கள் பாதங்கள் கல்லில் இடறாமல் தங்கள் கரங்களில் ஏந்திக்கொண்டு செல்லும்படி தூதர்களுக்கு கட்டளையிடுகிற சர்வ வல்ல தேவன் உங்களுக்கு உண்டு என்பதை மறந்துபோகாதிருங்கள். உங்களுக்கு எதிராக செயல்படுகிற, கண்களுக்கு தெறியாத பொல்லாத ஆவிகளோடு யுத்தம் செய்து உங்களை காத்துக்கொள்ள கர்த்தர் மிகாவேல் போன்ற தூதர்களை வைத்திருக்கிறார். ஆண்டவர் உங்களை கண்ணின் மணி போல காத்துக்கொள்ளுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org