சேர்க்கிறவரும், சிதறடிக்கிறவனும்.

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான,   என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் (மத். 12:30).

ஆண்டவர் ஜனங்களைத் தன்னோடு சேர்க்கிறவர். வருத்தப்பட்டு,   பாரஞ்சுமப்பவரைப் பார்த்து என்னண்டை வாருங்கள் என்று கர்த்தர் அன்போடு அழைத்தார். ஜனங்கள் மேய்ப்பனில்லாத  ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால்,   அவர்கள்மேல் மனதுருகினார் என்று வேதம் கூறுகிறது. பரலோக ராஜ்யத்தைப் பற்றிய உவமையில் கூட,    பரலோக ராஜ்யம் கடலிலே போடப்பட்டு,   சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது என்று கூறி,   எல்லோரையும் தன்னோடு சேர்க்க விரும்புகிறவர் என்பதை வெளிப்படுத்தினார். இரண்டு பேர் மூன்று பேர் என்னுடைய நாமத்தில் சேர்ந்து கூடிவரும்போது உங்கள் நடுவில் இருக்கிறேன் என்று வாக்களித்தவர். சபைக் கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறது போல நீங்களும் விட்டுவிடக்கூடாது என்றும் நமக்கு ஆலோசனை சொன்ன கர்த்தர் அவர். ஆனால் சத்துரு கர்த்தருடைய ஜனங்களைச் சிதறடிக்கிறவன். சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்,   அரணைக் காத்துக்கொள்,   வழியைக் காவல்பண்ணு,   அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள்,   உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து (நாகூம் 2:1) என்று சத்துருவைச் சிதறடிக்கிறவன் என்று ஆண்டவர் அழைத்தார். அவன் பலவான்,   அவனுடைய ஜனங்களை அவனுடன் கட்டுக்கோப்பாய் வைத்துக்கொண்டு,   கர்த்தருடைய பிள்ளைகளைச் சிதறடிக்க வகைதேடுகிறவன். வஞ்சிக்கிறவனுடைய தந்திரங்களைக் கர்த்தருடைய ஜனங்கள் புரிந்துகொண்டு எச்சரிப்புடன் காணப்படவேண்டும். 

நாம் ஆண்டவரோடும்,   அவருடைய பிள்ளைகளோடும் ஒருமனதோடு காணப்படவில்லை என்றால் மனுகுலத்தின் விரோதியாகிய சிதறடிக்கிறவனாகிய சாத்தானோடும் அவன் கூட்டத்தோடும் தான் காணப்பட முடியும். நடுநிலையில் யாரும் காணப்பட முடியாது. ஆகையால் தான் ஆண்டவர் லவோதிக்கேயா சபையின் ஜனங்களுக்குச் செய்தியை அனுப்பின வேளையில் நீ அனலாயிருந்தால் அனலாயிரு,   குளிராயிருந்தால் குளிராயிருந்து விடு. அனலும் இல்லாமல் குளிருமில்லாமல் வெதுவெதுப்பாயிருந்தால் என் வாயினின்று வாந்திப் பண்ணிபோடுவேன் என்று எச்சரித்தார். இரண்டு எஜமான்களுக்கு நாம் ஊழியம் செய்ய ஒருபோதும் முடியாது. ஒருவனைப் பகைத்து,   மற்றவனைச் சிநேகிப்போம்,   அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு,   மற்றவனை அசட்டைபண்ணுவோம்,   தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. ஆகையால் இரு நினைவுகளோடு காணப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கர்த்தரோடு நாம் காணப்படவில்லையென்றால்,   சத்துருவோடு காணப்படுவதினிமித்தம் கர்த்தருடைய விரோதிகளாகிவிடுவோம்.

கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் ஆண்டவரோடு ஐக்கியமாய்,   சேர்ந்து  காணப்படுங்கள். அவருடைய சமூகத்தைவிட்டுப் பிரிந்துவிடாதிருங்கள். இளைய குமாரனைப் போலத் தகப்பனுடைய அன்பை விட்டு தூரம் போய்விடாதிருங்கள். சபை ஐக்கியங்களில் ஒரு மனதோடு காணப்படுங்கள். அவருடைய மந்தையில் அனேகரைச் சேர்க்கிறவர்களாய் காணப்படுங்கள். எந்த சூழ்நிலைகளிலும் மந்தையை சிதறடிக்கிறவர்களாகக் காணப்படாதிருங்கள். கடைசி நாட்களில் கர்த்தருடைய ஜனங்களாகிய நமக்குள்ளாய்  காணப்படுகிற ஐக்கியம்தான் நம்முடைய வெற்றியாய் காணப்படுகிறது.  சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது,   கர்த்தர் என்றென்றைக்கும் நிலைநிற்கிற ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தந்து உயர்த்திஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *