பூட்டப்படாத வாசல்களும், திறந்த கதவுகளும்.

கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி,   ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும் படிக்கும்,  அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க,  கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும்,  அவனைப்பார்த்து,  அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு,  அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய்,  கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசாயா 45:1, 2).

கோரேஸ் என்ற பெர்சிய ராஜாவுக்கு,  அவன் ஆட்சிக்கு வருவதற்கு சுமார் 200 வருஷங்களுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் கொடுத்த வாக்குத் தத்தமாய்,  மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,  நீங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உங்களைக் குறித்த சகல நல்ல காரியங்களையும்,  ஏற்கனவே கர்த்தர் உங்களுக்காக நிர்ணயம் பண்ணி வைத்திருக்கிறார்,  ஆகையால் சந்தோஷப்பட்டு களிகூருங்கள். அவருடைய சித்தத்தின் மையத்தில் நீங்கள் காணப்படும் போது கர்த்தர் உங்களுக்கு நன்மையானதைத் தருவார்.

கோரேசைக் குறித்துக் கர்த்தர் சொல்லும் போது,  அவன் என் மேய்ப்பன் என்றும்,  நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்படப் போகிற எருசலேம் பட்டணத்தைக் கட்டுவதற்கும்,  ஆலயத்தைக் கட்டுவதற்கும் கட்டளைக் கொடுப்பான் என்றும்,  அவன் எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வான்(ஏசாயா 44:28) என்றும் அவனைக் குறித்து நோக்கம் கொண்டிருந்தார். அவனை தன்னுடையக் காரியங்களைச் செய்யும்படிக்கு அபிஷேகித்து,  அவனுக்கு தன்னுடைய நாமத்தையும் கர்த்தர் தரித்தார். புறஜாதியான அவனுக்குக் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.  அப்படியே அவன் ஆட்சிக்கு வந்த முதல் வருஷத்திலே,  கர்த்தர் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார் என்று சொல்லி,  யார் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட செல்கிறீர்கள் என்று தன்னுடைய ராஜ்யம் முழுவதும் விளம்பரம் பண்ணி(2 நாளா. 36:22, 23),  ஜனங்களை ஆலயத்தைக்கட்ட உற்சாகப்படுத்தினான். அதினிமித்தம் கர்த்தர் தன்மேல் கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்றுகிற பாத்திரமாய் காணப்பட்டான். ஆகையால் தான் கர்த்தர் அவனுக்கு வாக்களித்தபடியே பூட்டப்படாத வாசல்களும்,  திறந்த கதவுகளும் அவனுக்கு முன்பாக காணப்பட்டது. அவனுக்கு முன்பாக தடையாய் காணப்பட்ட வெண்கலக் கதவுகளைக் கர்த்தர் உடைத்தார்,  இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தார்,  அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்,  ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் அவனுக்கு கர்த்தர் கொடுத்தார். அவன் பலதேசங்களை போரில் வென்றான் என்று சரித்திரம் கூறுகிறது.

கர்த்தர் உங்களைக்குறித்துக் கொண்டிருக்கிற நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாய் காணப்படுங்கள்,  கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள். அப்போது கர்த்தர் உங்களுக்கு முன்பாகவும் பூட்டப்படாத வாசல்களையும்,  திறந்த கதவுகளையும் வைத்து,  நீங்கள் கையிடுகிற காரியங்களில் காரியசித்தியை உண்டுபண்ணுவார். அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்,  ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். தடைபட்டுப் போன எல்லா நன்மைகளையும் திரும்பத் தந்து உங்களைக் கனம் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *