லூக்கா 10:19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரத்தை கொடுக்கிறார். மாத்திரமல்ல ஒரு வாக்குத்தத்தையும் கொடுத்தார் அவைகள் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்பதாக. அதே அதிகாரத்தையும், வாக்குத்தத்ததையும் இயேசு இன்று நமக்கும் கொடுத்திருக்கிறார். இந்த வசனத்தில் சொல்லப்பட்ட வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் வித்தியாசமுண்டு.
உதாரணத்திற்கு ஒரு மிக பெரிய டிரக் அல்லது சரக்குவண்டி அல்லது மிகப்பெரிய ரயில் அதிக கிலோ உள்ள பொருட்களை ஏற்றிகொண்டுவருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வண்டிக்கு அதிக திறன் அல்லது வல்லமை காணப்படுவதால் இவைகள் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு வருகிறது. அதேவேளையில் இவ்வளவு பெரிய எடையுள்ள அந்த வாகனத்தை, ஒரு சிறிய காவல்துறை அதிகாரி தன்னுடைய கையை நீட்டி நிற்கச்சொல்லும்போது, அந்த வண்டி நின்றுவிடும்; தாண்டி செல்லமுடியாது. காரணம் அந்த காவல்துறை அதிகாரிக்கு, அந்த பெரிய எடையுள்ள வாகனத்தின்மீது அதிகாரம் காணப்படுகிறது. அப்படிப்பட்டதான அதிகாரத்தை தான் இயேசு உங்களுக்கு கொடுத்திருக்கிறார். பிசாசின் தந்திரங்களை முறியடிக்கும்படியான அதிகாரம், சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கும் அதிகாரம், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளும் அதிகாரத்தை இயேசு உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக்கோ 4:7) என்று வசனம் சொல்லுகிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீட்டர் என்று சொல்லுகிறார்கள், அப்படியாக நீங்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். மோசம்போக்குகிறவனுக்கு எதிர்த்துநில்லுங்கள், உலகத்தின் அதிபதியாகிய பிசாசுக்கு எதிர்த்துநில்லுங்கள், பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருப்பவனை எதிர்த்துநில்லுங்கள். அவனை கண்டு அஞ்சி விட வேண்டாம். இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களாக அவனை எதிர்த்து நிற்கும்போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.
ஒரு ஊழியக்காரர் தூங்கிக்கொண்டிருக்கும் போது சொப்பனத்தில் பிசாசு வந்து அந்த ஊழியக்காரரை பயன்படுத்துவதை போலவும், கொலை செய்து விடுவதைப்போலவும் காணப்பட்டான். அந்த சொப்பனத்தில் பிசாசானவன் பயங்கர இருளின் ஆதிக்கத்தை உடையவனைப்போல காட்சியளித்தான். அந்தவேளையில் அந்த ஊழியக்காரர் பிசாசை பார்த்து பயப்படாமல், இயேசுவின் நாமத்தில் அப்பாலே போ என்று உனக்கு கட்டளை கொடுக்கிறேன் என்று அதிகாரத்தோடு சொன்னார். உடனே பயன்படுத்தின பிசாசு ஓடிப்போய்விட்டான். ஆகையால் அவனை எதிர்த்துநில்லுங்கள். கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். இந்த உலகத்திலிருக்கும் எல்லா காரியங்களையும் மேற்கொள்ளும்படியான அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
நீங்கள் அதிகாரம் பெற்றவர்கள். பயப்படாமல், அஞ்சாமல் இருங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org