கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான் இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. பவுல் மேன்மைபாராட்ட அநேக காரியங்கள் இருந்தது. அவனைக்குறித்து அவன் மேன்மை பாராட்டவேண்டுமென்றால் அநேக காரியங்களை குறித்து மேன்மைபாராட்டிருக்கலாம். காரணம் அவன் புதிய ஏற்பாட்டில் பதிமூன்று நிருபங்களை எழுதியவன். அவனைக்குறித்து பவுல் சொல்லும்போது நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன் (அப் 22:3) என்பதாக சொல்லுகிறான். கமாலியேலின் பாதத்தருகே இருந்து வேதபிரமானங்களை கற்று தேர்ந்தவன். அந்நாட்களில் கமாலியேலின் பாதத்தில் இருந்து வேதத்தை கற்றுக்கொள்வது என்பது மிகவும் பாக்கியமாக எண்ணுவார்கள். அப்படியாக வேதத்தை கற்றவன்; உயரிய படிப்பை படித்தவன்; சொந்தமாக வேலைசெய்து ஊழியங்களை செய்து வந்தவன்; யூதருக்கு யூதன்; நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்பட்டவன்; கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன் என்றவன்; பலவீனருக்குப் பலவீனனை போலானவன்; இப்படிப்பட்ட மிகப்பெரிய அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான் நான் மேன்மை பாராட்ட ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது. அது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை. சிலுவையைக்குறித்து மாத்திரமே நான் மேன்மைபாராட்டுவேன் என்பதாக பவுல் சொல்லுகிறான்.
இன்றைக்கு நாம் எதைகுறித்து மேன்மைபாராட்டுகிறோம். சிலருக்கு என் பிள்ளை அமெரிக்காவில் படிக்கிறான் என்பதைக்குறித்து மேன்மை, சிலருக்கு என் பிள்ளை மிகப்பெரிய அதிகாரியாக பணிபுரிகிறான் என்பதில் மேன்மை, சிலருக்கு நான் மிகப்பெரிய கோடீஸ்வரன் என்பதில் மேன்மை, சிலருக்கு நான் மிகப்பெரிய படிப்பு படித்து அநேக பட்டங்களை வைத்திருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் மேன்மை, சிலருக்கு என் அப்பா மிகப்பெரிய அரசியல்வாதி என்பதை சொல்லிக்கொள்வதில் மேன்மை, சில ஊழியக்காரர்களுக்கு நான் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதில் மேன்மை, சிலருக்கு எனக்கு மிக பெரிய பண்ணை வீடு நிலம் உண்டு என்று சொல்லிக்கொள்வதில் மேன்மை, சிலருக்கு எனக்கு அநேக பாஷைகள் தெரியும் என்று சொல்லிகொளவதில் மேன்மை, இப்படியாக அநேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் மேன்மைபாராட்ட ஒரே ஒரு காரியம் மாத்திரமே இருக்கிறது என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மாத்திரமே மேன்மைபாராட்டுகிறவர்களாக இருக்கவேண்டும். சிலுவை கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம், இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாய் இருக்கிறது.
ஆகையால் தான் பவுல் சொல்லுகிறான் நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம் (I கொரிந்தியர் 1:23) என்பதாக. இன்றிலிருந்து ஒரு தீர்மானம் எடுங்கள். நான் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றைக்குறித்தும் மேன்மைபாராட்டத்திருப்பேனாக என்பதாக.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org