அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26, 27).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OGbiHd2KcGU
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் சிலுவையின் அடிவாரத்தில் அவரை இகழ்ந்து கொண்டு காணப்பட்ட திரள் கூட்டத்தின் மத்தியில், ஆண்டவரைப் பின்பற்றின ஒரு சில நபர்களும் காணப்பட்டார்கள். அவர்களில் இரண்டு பேர், இயேசுவின் தாயாகிய மரியாளும், அவரிடத்தில் அன்பாயிருந்த யோவானும் என்று மேற்குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்டவரிடத்திலிருந்து நன்மைப் பெற்றவர்கள் திரள் கூட்டமாய் காணப்பட்டிருந்தும், அவருடைய சீஷர்கள் பன்னிரண்டு பேர், வேறு எழுபது போராய் இருந்தும் கூட, சிலுவையின் அடிவாரத்தில் ஒரு சிறு கூட்டம் தான் காணப்பட்டார்கள். உலகத்திலும் கூட நாம் வாழ்ந்திருக்கும் போதும், மகிழ்ச்சியாய் காணப்படும் போது அனேகர் நம்மோடு காணப்படுவார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும்போது ஒரு சில நபர்கள் தான் காணப்படுவார்கள்.
சிலுவையின் அடிவாரத்தில் நின்றவர்களில் அதிகமான வேதனையோடு காணப்பட்டவர் இயேசுவின் தாயாகிய மரியாள். இயேசு பிறந்த எட்டாவது நாள் எருசலேம் ஆலயத்தில் பலிசெலுத்தப் படும்படிக்கு கடந்து சென்ற வேளையில், சிமியோன் என்ற வயோதிப தீர்க்கதரிசி பாலகனாகிய இயேசுவை தன் கையில் ஏந்தி, தேவனை ஸ்தோத்திரித்த வேளையில், மரியாளைப் பார்த்து உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று கூறினான் (லூக்கா 2:34, 35). மரியாள் அப்படிப்பட்ட வேதனையின் உச்சத்தை அனுபவித்த வேளை தான் அந்த நேரமாயிருந்தது. ஆனால் அவளைப்பார்க்கிலும் அதிக வேதனையைச் சிலுவையில் இயேசு சகித்தவராய் காணப்பட்டிருந்தும், அப்பொழுது கூட தன் தாயுடைய வேதனையை உணருகிறவராய் காணப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் வேதனை என்ன என்பது ஆண்டவருக்குத் தெரியும். நீங்கள் கடந்து செல்லுகிற பாதை எது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். உங்கள் மேல் கொண்ட அன்பினிமித்தம் சிலுவையில் பாடுகளையும், வேதனைகளையும் சகித்தவர், உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இயேசு சிலுவையண்டையில் நின்ற தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்று யோவானை அவள் மகனாக தன்னுடைய இடத்தில் ஒப்புக்கொடுக்கிறதைப் பார்க்கிறோம். இயேசு ஊழியத்தைத் துவங்கின வேளையில், கானாவூர் கல்யாண வீட்டில் மரியாளை ஸ்திரீயே என்று அழைத்தார், அதுபோல ஊழியத்தின் கடைசியில் தன் மரண வேளையிலும் அப்படியே அழைக்கிறார். அவர் தேவ குமாரன் என்பதை உணர்த்துவதற்கும், மரியாளுக்கும் அவர்தான் இரட்சகர் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்படி அழைத்தார். ஆகையால் தான் மரியாள் கிருபை பெற்ற, கனத்திற்குரிய பாத்திரமாய் காணப்பட்டிருந்தும் தொழுகைக்குரியவர் அல்ல என்பதை அறிந்துகொள்ளவேண்டும். மரியாளுக்கு யோவானை மகனாகவும், யோவானுக்கு மரியாளைத் தாயாகவும் ஆண்டவர் ஒப்புக்கொடுத்தார். ஒருவேளை மரியாளின் புருஷனாகிய யோசேப்பு ஏற்கனவே மரித்திருக்கக் கூடும், அவ்விசுவாசிகளாய் காணப்பட்ட தன் சகோதரர்களிடம் (யோவான் 7:5) தன் தாயை ஒப்புக்கொடுக்க மனதில்லாமல் தன்னிடம் அன்பாயிருந்த சீஷனிடம் ஒப்புக்கொடுத்தார். இயேசு, சிலுவையின் வேதனையின் மத்தியிலும் கூட தன்னலம் நோக்காமல் பிறர் நலம் நோக்குகிறவராய், மற்றவர்களுடைய தேவையைச் சந்திக்கிறவராய் காணப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உன்னைப் போல பிறனையும் நேசி என்று நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். மற்றவர்களுடைய கூக்குரலுக்கு ஒருபோதும் நம் செவியை அடைக்கிறவர்களாய் காணப்படக் கூடாது. மற்றவர்களுடைய வேதனைகளைப் புரிந்து கொள்ளுகிறவர்களாய் நாம் காணப்படவேண்டும். ஆண்டவருடைய அன்பும் கரிசனையும் மனதுருக்கமும் நமக்குள்ளும் காணப்பட வேண்டும். சுய நலம் எங்கும் பெருகிப்போய் காணப்படுகிற இந்த நாட்களில் நாமும் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் சிலுவை நாதரின் சாயலை வெளிப்படுத்துவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org