நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:15).
வேதத்தில் அனேக பரிசுத்தவான்களுடைய ஜெபம் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் பரிந்து பேசுகிற ஜெபம் (ஆதி.18), சாலொமோனின் ஆலய பிரதிஷ்டையின் ஜெபம் (1 இராஜா. 8), மோசேயின் ஜெபம், எலியாவின் ஜெபம் என்று அனேக ஜெபங்கள் காணப்பட்டாலும், இயேசுவின் நீண்ட ஜெபமான யோவான் 17ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள ஜெபம் மிகவும் மேன்மையானதாய் காணப்படுகிறது. ஒரு ஆசாரியனைப் போல தன்னுடைய சீஷர்களுக்காகவும், அவர்கள் மூலம் அவரை ஏற்றுக்கொண்ட நமக்காகவும், ஆண்டவர் ஜெபித்தார். இந்த ஜெபத்தை முடித்த பின்பு ஆண்டவர் தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார், அங்கே கெத்சமனே தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள் (யோவான் 18:1). ஆகையால் கல்வாரிக்கு கடந்து செல்லுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களுக்காகவும், நமக்காகவும் ஆண்டவர் ஏறெடுத்த ஜெபமாய் இந்த ஜெபம் காணப்படுகிறது.
இயேசுவின் ஜெபத்தில் அனேகக் காரியங்களைக் குறித்து அவர் வேண்டுதல் செய்தாலும், முக்கியமாக நம்மை தீமையினின்று காக்கும் படிக்காகப் பிதாவாகிய தேவனை நோக்கி அவர் வேண்டிக் கொண்டார். நமக்காக ஜெபித்த ஆண்டவர் இன்றும் நமக்காக வேண்டுதல் செய்கிறவராய் பிதாவின் வலதுப் பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். இயேசு உலகத்திலிருந்து நம்மை எடுத்துக் கொள்ளும்படிக்காகப் பிதாவை நோக்கி வேண்டுதல் செய்யவில்லை. காரணம் கர்த்தருடைய ஜனங்கள் தான் பூமிக்கு உப்பு, உலகத்திற்கு வெளிச்சம், பிசாசின் கிரியைகளையும், பாவத்தின் கிரியைகளையும் தடை செய்கிறவர்கள். இயேசுவின் சுவிஷேசத்தை உலகமெங்கும் கொண்டு செல்லுகிறவர்களும் நாமாய் காணப்படுகிறோம். கர்த்தருடைய வருகை மட்டும், அல்லது மரணம் நம்மைச் சந்திக்கும் மட்டும் நாம் இந்த உலகத்தில் காணப்படுவது அவசியம். ஆகையால் நம்மை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் படிக்காய் அல்ல, இந்த உலகவாழ்க்கையில் காணப்படுகிற எல்லா தீமையினின்று காக்கும் படிக்கு இயேசு நமக்காய் வேண்டிக்கொண்டார்.
உலகம் பொல்லாங்கனாகிய பிசாசுக்குள் காணப்படுகிறது, அவன் தீமைச் செய்கிறவன், ஆதிமுதல் மனுஷ கொலை பாதகனாய் காணப்படுகிறான். வேதம் அவனைத் திருடன் என்று அழைக்கிறது. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் (யோவான் 10:10). ஆரோக்கியத்தைத் திருடுவான், சமாதானத்தைத் திருடுவான், ஆசீர்வாதங்களைத் திருடுவான், அவனுக்குத் தீமை செய்வதைத் தவிர நன்மை செய்யத் தெரியாது. அவன் தன்னுடைய ஜனங்கள் மூலமாகவும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாகத் தீமைகளைச் செய்கிறவன். கொள்ளை நோய்களை விதைத்து ஜனங்களை ஈனப்படுத்துகிறவன். ஆனால் நம்முடைய தேவன், நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிறவர், நம்முடைய ஆத்துமாவைக் காக்கிறவர் (சங்கீதம் 121:7). ஆகையால் சுற்றி நடக்கிற தீமைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களை தீமையினின்று விடுவிக்க வல்லவரை நோக்கி, யாபேஸைப் போல ஜெபிக்கிறவர்களாய் காணப்படுங்கள். யாபேஸ், இஸ்ரவேலின் தேவனை நோக்கி, தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார் (1 நாளா. 4:10). உங்கள் வேண்டுதல்களையும் கர்த்தர் கேட்டு சகல தீமைகளுக்கும் உங்களை விலக்கிக் காத்து, இந்த கடினமான நாட்களை எளிதாய் கடக்கும் படிக்கு உதவிசெய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org