நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் (மீகா 7:15).
மீகா தீர்க்கதரிசி தேவனை நோக்கி பூர்வ காலத்தில் உம்முடைய மந்தையாகிய உம் ஜனத்தை மேய்த்தது போல மீண்டும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை மேய்த்தருளும் என்று ஜெபித்தான். அதற்குத் தேவன் அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளில் நடந்ததுபோலவே மீண்டும் அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்று வாக்குக் கொடுத்தார். நம்முடைய முற்பிதாக்கள் கண்ட அதிசயங்களை நீங்களும் காணும் படிக்குக் கர்த்தர் உங்களுக்கு அருள்செய்வார். மாம்சமான யாவருக்கும் நான் தேவன், என்னால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ என்று கேட்டவர், அவரால் எல்லாம் கூடும், அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிடச் சகலமும் நிற்கும். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். கடினமான ஒரு கால கட்டத்திற்குள்ளாய் உலக ஜனங்களாகிய நாம் அத்தனை பேரும் கடந்து செல்கிறோம். இப்படிப்பட்ட நாட்களில் அவருடைய அதிசயத்தின் வல்லமை மீண்டும் வெளிப்பட்டு தேசங்கள் தப்புவிக்கப்பட மீகாவைப் போல நாமும் ஜெபிக்க வேண்டும்.
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனிடத்திலிருந்து விடுவிப்பதற்காக தன்னுடைய ஓங்கிய புயத்தின் வல்லமையையும் பலத்த கரத்தின் வல்லமையையும் கர்த்தர் வெளிப்படுத்தினார். பத்து முறை வாதைகளினால் பார்வோனையும் அவன் ஜனங்கiயும் வாதித்தார். தொடருவேன் பிடிப்பேன் என்று இஸ்ரவேல் ஜனங்களைத் தொடர்ந்து வந்த பார்வோனையும் அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்தில் முற்றிலும் அமிழ்த்திப் போட்டார். அதன்பின்பும் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் ஒவ்வொரு நாளும் அதிசயமாய் நடத்தி வந்தார். காலை தோறும் தேனிட்ட பணியாரம் போன்ற தேவ தூதர்களின் உணவான மன்னாவைக் கொடுத்தார். கன்மலைலைய் பிளந்து தண்ணீரைத் திரளாய் கொடுத்தார். அக்கினி ஸ்தம்பமாய் மேகஸ்தம்பமாய் அவர்களோடு அனுதினமும் நடந்து கண்ணின் மணிபோலக் காத்துக்கொண்டார். அவர்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலனை அவர்களுக்குக் கர்த்தர் கொடுத்தார். எதிராய் வந்த எதிரிகளோடு கர்த்தர் யுத்தம் பண்ணினார். வாக்குத்தத்தின் படி அவர்களை அதிசயமாய் நடத்தி வந்து பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தைச் சுதந்தரிக்கும் படிக்கு செய்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய தேவன் அதிசயமானவர். உங்களுக்கும் ஒரு அதிசயம் செய்ய வல்லமையுள்ளவர். அன்று மனோவாவின் மனைவியைப் பார்த்து நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம் பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்கு என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி மூலமும் கர்த்தருடைய அதிசய நாமம் வெளிப்பட்டது. அவருடைய அதிசய நாமம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்பட்டு, உங்களுக்கு ஒரு அதிசயம் செய்வார். உங்கள் காத்திருப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவார். உங்கள் பலகீனங்களை மாற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து நல்ல ஆரோக்கியத்தைத் தருவார். நீங்கள் எதிர்பார்த்திருக்கிற நல்ல முடிவைத் தந்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org