யோவா 3:1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
ஊழியம் செய்ய அர்பணிக்கிறவர்கள், வாஞ்சையுள்ளவர்கள் இயேசுவை போல எந்நேரத்திலும் ஜனங்களை கண்டு சந்திப்பதற்கு, அவர்களுடைய தேவைகளை சந்திப்பதற்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும். இயேசு தன்னுடைய ஊழியத்தின் நிமித்தம் களைப்பாக இருந்திருக்கலாம், சாப்பிடாமல் கூட இருந்திருக்கலாம். நிக்கொதேமு என்னும் பரிசேயன் இயேசுவை சந்திப்பதற்கு இரவு நேரத்தில் ஒரு வேலை நடு ராத்திரியாக கூட இருந்திருக்கலாம் அந்நேரத்தில் வந்தான். இயேசு அவனை புறக்கணிக்கவில்லை. அவருடைய நேரத்தை இரவு என்றும் பாராமல் நிக்கேதேமுக்கு அவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்பதை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
சாப்பிடுவதற்கு கூட இயேசுவுக்கு சமயம் இல்லாதிருந்தது. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் (மாற் 3:20). சரியான நேரத்தில் சாப்பாடு, மிகப்பெரிய விடுதியில் தங்கி வித விதமான சாப்பாட்டை எதிர்பார்க்கும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இயேசுவுக்கோ சாப்பிடக்கூட சமயம் இல்லாமல் இருந்தது.
மனுஷகுமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லாதிருந்தது. இயேசு ஊழியம் செய்யும் நாட்களில் அவருக்கு நிம்மதியாக தூங்க இடமில்லை. ஆனால் இன்று ஒரு சில ஊழியர்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க இடம் ஆயத்தப்படுத்தி தரவில்லையென்றால் அவர்கள் ஊழியம் செய்ய வருவதில்லை. இப்படிப்பட்ட ஊழியக்காரர்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். மாத்திரமல்ல குறிப்பிட்ட ஊழியத்திற்கு புறப்படுமுன்னர் அங்கே எத்தனை நபர்கள் வருவார்கள் எவ்வளவு காணிக்கை வரும் என்று கேட்டு அறிந்த பின்னர் ஊழியத்திற்கு போகும் அநேக ஊழியர்கள் காணப்படுகிறார்கள். இயேசு நமக்கு முன்மாதிரியாக தன் ஊழியத்தை நிறைவேற்றி சென்றிருக்கிறார். அவரை போல எதையும் சந்திக்க, சுயத்தை வெறுத்து, தூக்கத்தை வெறுத்து, சாப்பாட்டின் மேல் கவனம் செலுத்தாமல் அர்ப்பணிப்போடு செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் (லுக் 6:12). பகல் முழுவதும் ஊழியம், இரவெல்லாம் தன்னுடைய பிதாவிடம் தனித்திருப்பதை இயேசு வழக்கமாக கொண்டிருந்தார். ஜெபம் செய்வதில் உறுதியாக தரித்திருந்தார். பிதாவிடம் தன்னுடைய ஐக்கியத்தை உறுதியாக வைத்திருந்தார். எவ்வளவு களைப்பாக இருந்தாலும், ஆண்டவரிடம் தனியாக தரித்திருப்பதை ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் விட்டு விடக்கூடாது.
இப்படியாக இயேசுவை போல கர்த்தருடைய பணியை செய்வதற்கு சிறிதானதோ பெரிதானதோ எதுவாக இருந்தாலும் அர்ப்பணிப்போடு செய்ய முன்வாருங்கள். அப்பொழுது கர்த்தருடைய பிரியம் உங்கள் மேல் இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org