நம்முடைய ஆதி பெற்றோர்களுக்கு ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார் உன் சந்ததியை பெருகப்பண்ணுவேனென்று.
ஆனால் ஆதி பெற்றோர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மூன்று பேரும் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அவர்கள் காத்திருக்கவேண்டியது இருந்தது.
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. ஆண்டவர் ஆபிரகாமிடம் சொன்னார் உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய், உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள், உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக என்பதான வாக்குத்தத்தங்களை கொடுத்தார். ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான் (எபி 6:13-15). ஆபிரகாமை போல பொறுமையாக விசுவாசத்தோடு காத்திருக்கும்போது கர்த்தர் ஏற்ற வேளையில் கர்ப்பத்தின் குழந்தையை கொடுத்து ஆசீர்வதிப்பார்.
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள் (ஆதி 25 :21). ஈசாக்கு ஒரு நல்ல முன்மாதியாக காணப்படுவதை பார்க்கிறோம். தன் மனைவி மலடியாயிருப்பதை கண்டு அவளை சோர்வடைய செய்யாமல், அவளை துக்கப்படுத்தாமல் மாறாக அவளுக்காக அவன் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். இன்றைய நாட்களிலும் அநேக புருஷர்கள் ஈசாக்கிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும். அவன் அவனுடைய மனைவி ரெபெக்காளுக்காக வேண்டுதல் செய்தபோது, அவள் கர்பந்தரித்தாள். குழந்தைக்காக காத்திருந்தவர்கள் தங்கள் மனைவிக்காக வேண்டுதல் செய்யுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களையும் கடாட்சிப்பார்.
யாக்கோபுடைய மனைவி ராகேலோ மலடியாயிருந்தாள். யாக்கோபு ராகேலுடைய உறவு தன்னுடைய தகப்பன், தாய் (ஈசாக்கு, ரெபெக்காள்) உறவைபோல இல்லாமலிருந்தது. ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான் (ஆதி 30:1). ராகேலுக்கும் யாக்கோபுக்கு வார்த்தை தகராறு ஏற்பட்டதை இந்த வசனத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ராகேல் பிள்ளைகொடு என்று பொறாமையினால் கேட்டதும், யாக்கோபு கோபத்தோடு அவளை கடிந்துகொண்டதும் பார்க்கிறோம். இப்படியாக தேவபிள்ளைகள் குழந்தைக்காக காத்திருக்கும்போது சண்டையிடுகிறவர்களாக காணப்படலாகாது. அது கர்த்தருடைய பார்வையில் பிரியமாய் இருக்காது. இருந்தாலும் கர்த்தர் நல்லவர், வாக்குத்தத்தில் உறுதியுள்ளவர், சொன்னதை செய்கிறவர், முடிவில் தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார் (ஆதி 30:22).
வாக்குத்தத்தம் செய்தவர் குழந்தைக்காக காத்திருந்தவர்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஏற்றவேளையில் குழந்தையை கொடுத்து ஆசீர்வதிப்பார். விசுவாசத்தில் உறுதியாய் காணப்படுங்கள், மனைவிக்காக ஜெபியுங்கள், சண்டையிட்டு கொள்ளாதிருங்கள். கர்ப்பத்தின் கனி கர்த்தரால் உங்களுக்கு கிடைக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org