இயேசுவை பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள்:-

யோவா 14:12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

இயேசு பிதாவினிடத்திற்கு போவதற்கு முன்பாக அவர் சொல்லுகிறார் என்னை விசுவாசிக்கிறவன் என்னை பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வான் என்பதாக. இயேசு செய்த கிரியைகள் என்ன என்று பார்க்கும்போது, அவற்றை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் யோவான் 6:38ன் படி என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இயேசு சொன்னதை பார்க்கலாம். இயேசு உலகத்தில் இருந்தபோதெல்லாம் பிதாவின் சித்தம் செய்வதே அவருடைய போஜனமாக இருந்தது. பிதாவின் சித்தமில்லாத இடங்களுக்கு அவர் செல்லவில்லை.

கானாவூர் கல்யாணவீட்டில் திராட்சைரசம் குறைவுபட்டபோது, மரியாளின் சொல்லை கேளாமல் என் வேலை இன்னும் வரவில்லை என்று சொல்லி பிதாவின் சித்தத்திற்காக காத்திருந்தார்.

யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தபோது, இயேசுவின் சகோதரர்கள் அவர் செய்கிற கிரியைகளை சீஷர்கள் பார்க்கும்படியாக செய்ய சொன்னார்கள். அப்பொழுது இயேசு பிரபலமாகலாம் என்று சொன்னார்கள். இன்றும் அநேகர் தங்களுடைய சுய விளம்பரத்தை செய்வதையே குறிக்கோளாக கொண்டு தங்களை தாங்களே பிரபலமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது (யோவா 7:6) என்று பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு தன்னுடைய நீண்ட ஜெபத்தில் சொன்னார் பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன் (யோவா 17:4) என்பதாக. அநேகர் நினைப்பது என்னவென்றால் இயேசு 2 அற்புதங்களை செய்தால் நாம் 40 அற்புதங்களை செய்யலாம் அது தான் அவரை காட்டிலும் பெரிய கிரியைகளை செய்வது என்பதாக. பெரியகிரியை என்றால் இயேசு பிதாவின் சித்தத்தை எப்படி இயேசு நிறைவேற்றினாரோ, அதை காட்டிலும் அவருடைய விசுவாசிகளும் செய்து முடிக்க முடியும் என்பதே.

அதிகமான கிரியை என்று இந்த வசனத்தில் எழுதப்படவில்லை, மாறாக பெரிய கிரியைகள் என்று எழுதப்பட்டிருக்கிறது (Not more works ; but greater works). ஆகையால் இயேசு பிதாவுக்கு கீழ்ப்பட்டிருந்ததை பார்க்கிலும், நீங்கள் அவரை காட்டிலும் கீழ்ப்பட்டிருக்க முடியும்; அவர் தன்னை சிலுவை பரியந்தம் தன்னை தாழ்த்தினது போல, அவரை பார்க்கிலும் உங்களை நீங்கள் தாழ்த்த முடியும்; இயேசு செய்த ஊழியத்தை பார்க்கிலும், நீங்கள் பெரிய ஊழியத்தை செய்ய முடியும்; இயேசு பிதாவின் சித்தத்தை செய்து முடித்ததை பார்க்கிலும், நீங்கள் அவரை பார்க்கிலும் அதிகமாக பிதாவின் சித்தத்தை செய்ய முடியும்.

இயேசு பார்க்கிலும் பெரிய கிரியைகள் செய்ய பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவிசெய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *