என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்.

என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் (ஏசாயா 40:1).

நம்முடைய தேவன் சகலவிதமான ஆறுதலின் தேவன். அவர் நம்மை ஆற்றித் தேற்றுகிறவர். ஒருவனை அவன் தாய் தேற்றுவது போலத் தேற்றுவேன் என்பது அவருடைய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. ஆவியானவருக்கு இன்னொரு பெயர் தேற்றரவாளன் என்பதாகும். அவருடைய ஆறுதலின் பிரசன்னம் நம் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை ஆறுதல் படுத்துவதற்கும் தேற்றுவதற்கும் போதுமானதாய்க் காணப்படுகிறது.

கடினமான சூழ்நிலைகளில் நாம் கடந்து செல்லும் போது யாராகிலும் நம்மைத் தேற்றுவார்களா என்றும், ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவார்களா என்றும் நாம் எதிர்பார்ப்பது உண்டு. நோவா பிறந்த போது, அவனுடைய தகப்பனாகிய லாமேக்கு, கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். ஆதிப்பெற்றோரின் பாவத்தின் நிமித்தம் வியர்வை சிந்திப் பாடுபட்டதினாலே அவனுக்குள் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். யோசே என்பவனுக்கு அப்போஸ்தலர்கள் ஆறுதலின் மகன் என்று அர்த்தம் கொள்ளும் பர்னபா என்ற மறுபெயரைப் போட்டார்கள் என்று அப்.-4:36ல் வாசிக்கிறோம். பர்னபா தன் பெயரின் படியே ஆதிசபையின் நாட்களில் காணப்பட்ட ஜனங்கள் போஷிக்கப்பட தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்து ஊழியத்தில் அவர்களுக்கு ஆறுதலாய் காணப்பட்டான். அதுபோல சவுல் இயேசுவால் சந்திக்கப்பட்ட வேளையில் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்து கொள்ளப் பார்த்தான். ஆனால் அவனைச் சீஷனென்று அவர்கள் நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.  அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான் என்று அப். 9:26,27ல் வாசிக்கிறோம். சவுலை மற்ற சீஷர்கள் ஒதுக்கின வேளையில் பர்னபா அவனுக்கு ஆறுதலாய், துணையாய்க் காணப்பட்டான். இப்படி சிலவேளைகளில் சிலர் நமக்கு ஆறுதலாய்க் காணப்படக் கூடும்.  ஆனால் எல்லா நேரங்களிலும் கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறவர்.

கர்த்தருடைய பிள்ளைகளே, திரளான ஜனங்கள் ஆறுதலையும் தேறுதலையும் எதிர்பார்த்துக் காணப்படுகிறார்கள். நாம், ஒரு நோவாவைப் போல, பர்னபாவைப் போல, நல்ல சமாரியனாகிய இயேசுவைப் போல, மற்றவர்களை ஆறுதல் படுத்துகிறவர்களாகவும், உதவி செய்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும். நாம் பேசுகிற ஆறுதலின் வார்த்தைகள் உடைந்து போனவர்களைத் திரும்ப எடுத்துக் கட்டும். நாம் செய்கிற பண உதவி அனேகரைப் போஷிக்கவும், மருத்துவச் செலவுகளைச் சந்திக்கவும் பயன்படும். தேவனுடைய உன்னதப் பணியைச் செய்கிற பல கிராம சபை ஊழியர்கள் சோர்வுற்று, யாராலும் விசாரிக்கப்படாமல், சபைகளும் மூடப்பட்ட நிலையில், உடைந்துபோனவர்களாய் காணப்படுகிறார்கள். அவர்களுக்கு நாம் செய்கிற உதவிகள் மூலம் அவர்களை ஆறுதல் படுத்தவும், தேற்றவும் முடியும். தேற்றரவாளனாகிய தேவ ஆவியானவர் அப்படிப்பட்ட கிருபைகளைக் நம் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக. 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *