அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள், இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது (நியாயாதிபதிகள் 9:15).
முட்செடியின் நிழலால் யாரையும் பாதுகாக்க முடியாது. முட்செடியின் நிழலில் தஞ்சம் அடைவோருக்கு அதனால் எந்த நன்மையும் உண்டாவதில்லை. ஆனால் அனேகர் இந்நாட்களில் முட்செடியின் நிழலை வாஞ்சிக்கிறார்கள். கிதியோனின் குமாரன் யோதாம் மரங்களை வைத்துக் கூறின உவமையை நியா.9:7-15ல் வாசிக்கிறோம். கிதியோன் இஸ்ரவேல் ஜனங்களை மீதியானியர்களின் கைகளிலிருந்து மீட்ட நியாயாதிபதி. இஸ்ரவேல் ஜனங்கள் அவனை ராஜாவாக்க விரும்பின வேளையில், நான் உங்களை ஆள்வதில்லை, கர்த்தரே உங்களை ஆளுகிறவர் என்று கூறி கர்த்தரை மகிமைப்படுத்தினான். அவருக்கு எழுபது குமாரர்கள் காணப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் அபிமெலேக்கு, அவன் வேலைக்காரியின் மூலமாகப் பிறந்தவன். கிதியோன் மரித்துப் போனபின்பு அபிமெலேக்கு தன் தாயின் குடும்பத்தாரோடு சேர்ந்து, கிதியோனின் மற்ற அறுபத்தெட்டு குமாரர்களைக் கொலை செய்துவிடுவான். கிதியோனின் இளைய குமாரன் யோதாம் ஒளிந்திருந்தபடியினால் அவன் மட்டும் தப்பினான். அவன் கெரிசீம் மலையின் உச்சியில் நின்று சீகேமின் ஜனங்களை நோக்கி, விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படிபோய், ஒலிவமரத்தைப் பார்த்து, நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு ஒலிவமரம், தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை விட்டு, மரங்களை அரசாளப் போவதில்லை என்றது. அப்படியே அத்திமரமும், திராட்சை செடியும் கூறினது. அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து, நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து, நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள் என்றது. முட்செடி மற்ற மரங்களை விட மிகவும் சிறியதாயிருந்தும், தன்னால் மரங்களுக்கு நிழல் கொடுக்க முடியாது என்பதையறிந்திருந்தும், என் நிழலில் வந்தடையுங்கள் என்று கூறினது. நாமும் இப்படிப்பட்ட பலகீனமான தலைவர்கள் நம்மைப் பாதுகாப்பார்கள் என்றும், தேசம் நம்மைப் பாதுகாக்கும் என்றும், ஐசுவரியம் நம்மைப் பாதுகாக்கும் என்றும், மருந்து மாத்திரைகள் நம்மைப் பாதுகாக்கும் என்றும் முட்செடியைப் போன்ற பிரயோஜனமற்றவை மேல் நம்பிக்கை வைத்து, அதினிமித்தம் ஏமாற்றம் அடைகிறோம். ஆனால் முட்செடியின் நிழல் ஒருபோதும் நம்மைப் பாதுகாப்பதில்லை. அசீரியர்களிடம் இருந்து தப்புவதற்கு, யூதாவின் குடிகள் எகிப்தின் நிழலிலே ஒதுங்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் ஆண்டவர் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாக இருக்கும் என்று எச்சரித்தார் (ஏசாயா 30:2,3).
கர்த்தருடைய பிள்ளைகளே, முட்செடியின் நிழலும், எகிப்தின் நிழலும், உங்களுக்கு வெட்கத்தையும் அவமானத்தையும் கொண்டுவரும், அவைகள் உங்களுக்கு அடைக்கலமாய் ஒருபோதும் இருப்பதில்லை. ஆகையால் உன்னதமானவருடைய மறைவுக்குள் வந்து விடுங்கள், அப்போது நீங்கள் சர்வ வல்லவருடைய நிழலின் கீழ்க் காணப்படுவீர்கள். அவருடைய நிழலின் கீழ் காணப்படும் போது அவர் உங்களைப் பாதுகாப்பார், உங்களை ஆறுதல் படுத்துவார், உங்களை ஆதரிப்பார். நம்முடைய தேவன் விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறவர், வறண்டு போன வாழ்க்கையை ஆறுதல் படுத்தி துளிர்க்க வைக்கிறவர், தாயைப் போலத் தேற்றி வாழவைக்கிறவர். தமது கரத்தின் நிழலினால் நம்மை மறைத்துப் பாதுகாக்கிறவர்.
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (சங். 63:7) என்று சங்கீதக் காரன் நன்றி நிறைந்த இருதயத்தோடு அறிக்கையிட்டான். சூலமித்தி, காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார், அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது (உன். 2:3) என்றாள். நாமும் கர்த்தருடைய நிழலை வாஞ்சித்து, அதில் களிகூரும் போது, அவர் நம்மைக் கண்மணிபோலக் காத்திடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org