பலன் தரும் நல்ல நிலம்.

சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து,  சிலது  நூறாகவும்,  சிலது அறுபதாகவும்,சிலது முப்பதாகவும் பலன் தந்தது (மத். 13:8).

இயேசு தன் ஊழியத்தின் நாட்களில் அனேக உவமைகளைக் கூறினார். ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை,இஸ்ரவேல் தேசத்தின் குடிகளின்  அனுதின வாழ்க்கையில் காணப்படுகிற சில சிறிய சம்பவங்களை  வைத்துப் போதித்தார். உவமைகளானாலன்றி அவர் வேறொன்றும் அவர்களோடு பேசவில்லை என்றும் வேதம் கூறுகிறது. விதைக்கிறவனைப்  பற்றிய உவமையில் நான்கு விதமான நிலங்களைக் குறித்து கர்த்தர் போதித்தார். நான்கு விதமான நிலங்களும்,ஜனங்களின் நான்கு விதமான இருதயங்களைக் குறிக்கிறது. இதில் நம்முடைய இருதயம் எந்த வகையைச் சார்ந்தது என்பதையறிந்து நாம் நம்மைச் சரிசெய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

 விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைக்கையில்,சில விதை வழியருகே விழுந்தது. மனிதர்கள் நடக்கும் வழியருகே விதைகள் விழுந்ததின் நிமித்தம்,அந்த மண்  கடினமாயிருந்ததினால் விதைகள் முளைக்கவுமில்லை,பலன் தரவுமில்லை. ஆகையால் பறவைகள் வந்து விதைகளைப் பட்சித்தது. உவமையின் அர்த்தத்தை ஆண்டவர் கூறும் போது,ராஜ்யத்தின் வசனத்தை ஒருவன் கேட்டும்,அவனுடைய இருதயம் கடினமாகவும்,உணர்வில்லாமலும் காணப்படுவதினால், பொல்லாங்கனாகிய  பிசாசு வந்து,விதைகள் பலன் தருவதற்கு முன்பாகவே அவைகளைப் பறித்துக் கொள்ளுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் இருதயங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் கிரியைச் செய்யாத உணர்வில்லாத இருதயமாய் காணப்படுமே என்றால் இன்றே கர்த்தருடைய ஆவியானவர் உங்கள் இருதயங்களை  பண்படுத்தும் படிக்கு  அவரண்டை  திரும்புங்கள்.  சங்கீதக்காரனைப்  போல உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும் என்று வேண்டுதல் செய்யுங்கள். வசனம் கிரியைச் செய்யாத இருதயம் மிகுந்த ஆபத்தில் காணப்படுகிறது என்பதையறிந்து கொள்ளுங்கள்.  

வேறுசில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது,மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. ஆனால் வெயில் ஏறினவுடனே,காய்ந்து போய்,வேரில்லா மையால் உலர்ந்து போயிற்று. இப்படிப்பட்ட இருதயங்களை உடையவர்கள் வசனத்தைக் கேட்ட உடன் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் வசனத்தின் நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் வந்தவுடன் இடறலடைந்து கர்த்தரை விட்டு விலகி விடுவார்கள். கர்த்தருடைய ஜனங்கள் கீழே வேர்பற்றி மேலே  கனிகொடுக்கும்படிக்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.  வசனத்தில் ஆழமாய் வேரூன்றினால் மட்டும் தான் பலன் கொடுக்கிற ஜீவியம் செய்ய முடியும். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். ஆகையால் உபத்திரவங்களையும் துன்பங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தருடைய வார்த்தையை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். கர்த்தருடைய  வசனங்களை வாசிக்கிறவர்களையும், கேட்கிறவர்களையும், கைக்கொள்ளுகிறவர்களையும் கர்த்தருடைய வசனம் பாக்கியவான்களாய் மாற்றும்.  

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது,முள் வளர்ந்து விதைகளை நெருக்கிப்போட்டது.  இப்படிப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும்,உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால்,பலனற்றுப் போகிறார்கள். வளமான நிலங்கள் தான்,ஆனால் மார்த்தாளைப் போல அனேக உலகக் காரியங்கள் மேல் கவலை கொண்டு, எப்போதும்  உலகத்திற்குரியவற்றைக்  குறித்துச்  சிந்திக்கிறவர்களாய் காணப்படுவதினால்,பலன் கொடுக்க முடியவில்லை. அதுபோல உலக ஐசுவரியங்கள் மேல் கவலையும்,துரிதமாய் பணக்காரனாகி விடவேண்டும் என்ற ஆசையும் கனிகொடுக்க முடியாமல் செய்துவிடுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, போதுமென்கிற  மனதுடனே கூடிய தேவபக்தி மிகுந்து ஆதாயம் என்று வேதம் சொல்லுகிறது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது,சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு நித்திய ஜீவனைத் தருவதில்லை. ஆகையால் உங்கள் இருதயங்களை உலகத்திற்குரிய காரியங்களால் பாரமாக்கி விடாதிருங்கள். 

சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது  நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. இப்படிப்பட்டவர்கள், வசனத்தைக் கேட்கிறவர்களும், உணருகிறவர்களுமாயிருப்பார்கள், ஆகையால் மிகுந்த பலன் கொடுக்கிறவர்களாய்  காணப்படுவார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகளே,உங்கள் இருதயங்கள் நல்ல நிலங்களாய் காணட்டும். உங்களுடைய பிரியம் கர்த்தருடைய வேதத்தில் காணப்படும் பொழுது நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வாய்க்கும். கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு,அவைகளின் படி செய்யும் போது நீங்கள் எந்த சூழ்நிலைகளிலும் அசைக்கப்படுவதில்லை. கர்த்தருடைய வார்த்தை பேதைகளை ஞானியாக்கும். அவர் வசனத்தை அனுப்பி உங்களைக் குணமாக்குகிறவர். 

இந்த நாளில் கர்த்தருடைய வார்த்தைக்கு உங்களை அர்ப்பணியுங்கள், வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்கத் தீர்மானியுங்கள். அப்போது நீங்கள்  கனிகொடுக்கிற  விருட்சங்களைப் போலச் செழுமையாய் ஓங்கி வளருவீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *