அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு, பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் (2 பேதுரு 1:19).
தீர்க்கதரிசனம் என்பது வருங்காரியங்களை முன்னறிவிப்பதாகும். வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு கூறப்பட்டவை. ஆகையால் ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் அப்படியே நிறைவேறிக்கொண்டு வருகிறது. மேசியாவாகிய இயேசுவின் தோன்றத்தைக் குறித்தும், ஊழியத்தைக் குறித்தும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டவை அத்தனையும் இயேசுவில் நிறைவேறினது. நம்முடைய நாட்களிலும் அனேகர் தீர்க்கதரிசனங்களைக் கூறுகிறார்கள். ஒவ்வொரு புதிய வருஷங்களின் முதல் நாளிலும் அனேகர் தீர்க்கதரிசனங்களைக் கூறுவதுண்டு. சில அப்படியே நிறைவேறுகிறது. 1992ம் வருஷம் பெப்ரவரி மாதத்தில் நான் காருண்யாவில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் டவுண்ஹால் பகுதியிலுள்ள ஒரு ஆலயத்தில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தது, அதில் நான் கலந்து கொண்ட வேளையில் செய்தியைக் கொடுத்த முன்பின் அறியாத ஊழியர் என் பெயரைச் சொல்லி கர்த்தர் உனக்குச் சபை தரிசனத்தைக் கொடுக்கிறார் என்று கூறினார். இந்நாட்களில் அது அப்படியே நிறைவேறுகிறதைப் பார்த்து கர்த்தரைத் துதிக்கிறேன். ஆனால் சிலர் தேவ ஆவியினால் ஏவப்படாமல், மனுஷருடைய சித்தத்தினால் உண்டாகும் தீர்க்கதரிசனங்களைக் கூறும் போது அவைகள் ஒரு நாளும் நிறைவேறுவதில்லை, அதுவே சிலவேளைகளில் கண்ணியாய் முடிவதுமுண்டு. கர்த்தருடைய பிள்ளைகள் அத்தனைப் பேருக்கும் உறுதியான தீர்க்கதரிசனம் ஒன்று காணப்படுகிறது. அது வேத வசனங்களாய் காணப்படுகிறது. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கர்த்தருடைய வார்த்தைகள் ஒன்றும் ஒழிந்து போவதில்லை. அவைகள் ஒவ்வொன்றும் எழுத்தின்படி நிறைவேறும்.
கர்த்தருடைய வசனத்தை நாம் கவனித்திருப்பது நல்லது என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது (We must pay attention). நாம் இந்நாட்களில் எல்லாவற்றையும் கவனிக்கிறோம், எல்லாருடைய சத்தத்திற்கும் செவிகொடுக்கிறோம். ஆனால் என்னுடைய ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று கூறின கர்த்தருடைய சத்தத்திற்கும் அவர் வார்த்தைக்கும் போதுமான அளவு கவனத்தையும், கனத்தையும் நாம் கொடுப்பதில்லை. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன், அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள் என்று ஓசியா 8:12ல் கர்த்தர் வேதனையோடு கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. என் ஜனங்கள் வேதத்தைப் பற்றிய அறிவில்லாமையால் சங்கராம் ஆகிறார்கள் என்றும் கர்த்தர் கூறினார். என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான் என்று எசே. 20:11ல் கர்த்தர் கூறினார். ஆம், கர்த்தருடைய வேதத்தின் படிச் செய்கிற மனுஷன் மாத்திரம் பிழைப்பான். அவன் கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போல எந்த சூழ்நிலையிலும் அசையாமல் நிலைத்திருப்பான். அப்படிப்பட்டவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வாய்க்கும். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளே அதிக உறுதியான வசனத்திற்கு நேராய் உங்கள் கவனத்தைத் திரும்புங்கள்.
எதுவரைக்கும் கர்த்தருடைய வேதத்தை நாம் கவனித்து வாழவேண்டும் என்பதைப் பற்றி மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது என்று பார்க்கும் பொழுது, பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனிக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. விடிவெள்ளியாகிய இயேசு மணவாட்டியாகிய நம்மைச் சேர்த்துக் கொள்ள மத்தியவானில் வெளிப்படும் வரைக்கும், உறுதியான கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தையை நாம் கவனித்து அனுதினமும் வாழவேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார். இருளின் நாட்களிலும், மரண இருளின் பள்ளத்தாக்கின் நாட்களிலும், கொள்ளை நோய்களும், பாடுகளும் காணப்படுகிற இந்த இருண்ட நாட்களிலும் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க உங்களை அர்ப்பணியுங்கள், அப்போது நீங்கள் பாக்கியவான்கயாய் இருப்பீர்கள், வேதவார்த்தைகள் உங்களைச் செழிக்கச் செய்யும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org