இரண்டு சகோதரர்கள்.

யாக்கோபு வம்சத்தார் அக்கினியும்,யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள், ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்,அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்,கர்த்தர் இதைச் சொன்னார் (ஒபதியா 1:18).

ஓபதியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய  புஸ்தகம். ஆகிலும் மிக முக்கியமான செய்தியைக் கர்த்தருடைய ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். இரண்டு சகோதரர்களைக் குறித்தும், அவர்கள்  வம்சத்தைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது.  ஈசாக்கின் இரண்டு குமாரர்களாகிய  ஏசாவும், யாக்கோபும்; அவர்கள் என்பதை மேற்குறிப்பிட்ட வசனத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.  யாக்கோபின் வம்சம் அக்கினியும், அக்கினி  ஜுவாலையுமாயிருப்பார்கள்  என்றும், இன்னொரு வம்சமாகிய  ஏதோமியராகிய ஏசாவின் வம்சம் வைக்கோல் துரும்பாயிருப்பார்கள் என்றும், அக்கினியாயிருப்பவர்கள் வைக்கோல்  துரும்பாகக்  காணப்படுகிறவர்களைக்  கொளுத்திப் பட்சிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஆவிக்குரிய சந்ததி அக்கினியாயிருப்பார்கள் என்பதும், அவருடைய சாயலை அணியாத மாம்சீக சந்ததி வைக்கோல் துரும்பாகக் காணப்படுவார்கள் என்பதும் அர்த்தமாகக் காணப்படுகிறது.  ஒரே தகப்பனுடைய பிள்ளைகள், ஆனால் ஒரு கூட்டம் அக்கினியாயும், மற்றவர்கள் வைக்கோல் துரும்பாயும் காணப்படுகிறார்கள்.

நம்முடைய தேவன் அக்கினி மயமானவர். அக்கினி நதி  அவருடைய சிங்காசனத்திலிருந்து பாய்ந்து வருகிறது. அக்கினியைப் போடவந்தேன் என்று ஆண்டவர் கூறினார்.  தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும்  செய்கிறவர்.  பெந்தெகோஸ்தே  நாளில் அக்கினி மயமான நாவுகளாய் இறங்கி வந்தவர். அவருடைய வார்த்தை அக்கினியைப் போலிருக்கிறது என்று வேதம் கூறுகிறது (எரேமியா 23:29).  யோவான் ஸ்நானகன் நான் ஜலத்தினால்  உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும்  நான் பாத்திரன் அல்ல, அவர்  பரிசுத்தாவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார் என்றார்.  கற்புள்ள கன்னிகையாய் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்ட மணவாட்டி சபை அக்கினியாய் காணப்படும்.  கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் சேவிக்கிற  கர்த்தருடைய  பிள்ளைகள் அக்கினி  ஜுவாலைகளாய்  காணப்படுவார்கள்.  ஒருநாள் அக்கினி மயமான இரதங்கள் மூலம் கர்த்தர் எலியாவை எடுத்துக்கொண்டது போல, பரிசுத்த ஆவியானவர் அக்கினி இரதமாய் மாறி அவருடைய வருகையின் நாளில் நம்மை எடுத்துக் கொள்ளுவார்.

ஏதோமிய வம்சம் துரும்பாயிருப்பார்கள். ஆண்டவர்  அவர்களைத்  துரும்பாக்கினதின் காரணம் என்ன? தேவன் பட்சபாதமில்லாதவர் என்று வேதம் கூறுகிறது. ஒருபுறம் கர்த்தருடைய கிருபை பொருந்தின கண்கள் ஏசாவை வெறுத்து யாக்கோபை சிநேகித்தாலும், மூத்தவன்  இளையவனைச் சேவிப்பான் என்று தீர்க்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் ஏசா தன் இருதயத்தில் அகந்தை உள்ளவனாய் காணப்பட்டான் என்று ஒபதியா 1:3ல் எழுதப்பட்டிருக்கிறது, அதோடு தன் சகோதரனுக்குக் கொடுமை செய்தான் என்று ஒபதியா 1:10ல் வாசிக்கமுடிகிறது.  அவன் தன் சகோதரனுடைய எதிரிகளோடு இணைந்து சகோதரனுக்கு விரோதமாய் யுத்தம் செய்தான் என்றும் தன் சகோதரன் மேல் பிரியம் இல்லாதவனாகவும் காணப்பட்டான்(1:2) என்றும் அவன் ஆஸ்திகளில் கைபோட்டு தன் சகோதரன் குடும்பத்தில் அனேகரைச் சங்கரித்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால், ஏசாவின் வம்சம் தேவனுடைய  கோபத்தைச்  சம்பாதித்தது.  அதனிமித்தம்  ஏசாவின் வம்சத்தைiதை கர்த்தர் வைக்கோல் துரும்பாக்கினார்.  ஏசா  வம்சத்தின் சுபாவங்களையுடைய  மாம்சீகத்தில்  காணப்படுகிற  அத்தனை  பேரையும் கர்த்தர் வைக்கோல் துரும்பாக்குகிறவர்.

நாம் எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாய் காணப்படுகிறோம்?. அக்கினியாய், அக்கினி  ஜுவாலைகளாகப்  பரலோக  யோசேப்பாகிய  இயேசுவின்  வம்சத்தைச் சேர்ந்தவர்களாய் காணப்படக் கர்த்தர் நமக்குக் கிருபை செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *