உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்.

பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும் படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே 29:10).

யூதா ஜனங்களுடைய மீறுதல்களின் நிமித்தமும், பாவங்கள் நிமித்தமும், கர்த்தர் அவர்களை எழுபது வருஷம் பாபிலோனியச் சிறையிருப்பிற்கு விற்றுப் போட்டார். ஆனால், எழுபது வருஷம் முடிந்தவுடன்  அவர்களைச்  சந்தித்தது  விடுவிப்பேன் என்ற நல்வார்த்தையையும்  எரேமியா  தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் கொடுத்திருந்தார். அப்படியே அவர் கொடுத்த நல் வார்த்தையை நிறைவேற்றினார். நம்முடைய தேவன் நமக்குக் கொடுத்த ஒவ்வொரு நல் வார்த்தைகளையும் அவர் குறித்த நேரத்தில் அப்படியே நிறைவேற்றுகிறவர். அவர் எவ்வளவேனும்  பொய்யுரையாத தேவன்.  கர்த்தர் தாவீதிற்கு, அவனுடைய  கர்ப்ப்பிறப்பு ஆலயத்தைக் கட்டுவான் என்று வாக்குக் கொடுத்தார்.  தாவீதின் குமாரனாகிய சாலொமோன், ஆலயத்தைக் கட்டி பிரதிஷ்டை செய்த வேளையில், அவர் என் தகப்பனாகிய  தாவீதுக்குத்  தம்முடைய வாக்கினால் சொன்னதைத் கரத்தினால் நிறைவேற்றினார் (1 இரா. 8:15) என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல  யோசுவாவின்  தலைமையின் கீழ் கானானை முழுவதுமாக சுதந்தரித்த வேளையில், கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று (யோசுவா 21:45) என்று வேதம் கூறுகிறது. 

நாம் அனேக வேளைகளில் கொடுக்கிற வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை.  ஒருவேளை அப்படிக் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றுகிறவர்களாய் காணப்பட்டால் அனேக திருமண உறவுகள் விவாகரத்தில் முடிந்திருக்காது,  குடும்பங்களில் பிரிவினைகள் காணப்பட்டுப் பிரிந்து வாழ்கிற நிலைமைகள் வந்திருக்காது. குடும்பங்களில்  சமாதானக்கேடும்  எழும்பாமல் இருந்திருக்கக் கூடும்.  ஒவ்வொரு  திருமணங்களிலும் மூன்றாவது நபராய் கர்த்தர் இணைந்து, நாம் அவருடைய சமூகத்தில் கொடுக்கிற வாக்குறுதிகளையெல்லாம் அவர் கவனிக்கிறார் என்ற எண்ணம் ஒவ்வொரு கர்த்தருடைய  பிள்ளைகளுக்குள்ளாகவும் காணப்பட வேண்டும். அதுபோல அனேக தீர்மானங்களை வருஷத்தின் துவக்க நாளில் எடுப்பதுண்டு. கர்த்தர் என்னை ஆசீர்வதித்தால் அவருக்காக இதைச் செய்வேன் என்று தேவ சமூகத்தில் பொருத்தனைகளும் உடன்படிக்கையும் செய்வதுமுண்டு. ஆனால் சிலநாட்களுக்குள்ளாகவே எல்லாவற்றையும் மறந்து, நமக்கு நன்மை செய்த தேவனையும் மறந்து, எல்லாம் என்னுடைய  கைபெலத்தால் வந்தது என்று நினைப்பவர்கள் அனேகம். ஆனால் நம்முடைய தேவன் உண்மையுள்ளவர். அவர் நமக்குக் கொடுக்கிற நல்வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்றுகிறவர். நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்! (2 தீமத். 2:13).

இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்பது கர்த்தர் உங்களுக்கு அருளின அவருடைய நல்வார்த்தையாய் காணப்படுகிறது. ஆகையால் நீங்கள் தண்ணீரைக் கடக்கும் போதும், அக்கினி போன்ற சோதனைகளின் பாதையில் நடக்கும் போதும் கர்த்தர்  உங்களோடிருப்பார். கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, யோசுவா கானானை எப்படிப் பங்கிடுவது, ஏழு ஜாதிகளையும் முப்பத்தியொரு ராஜாக்களையும் எப்படி வீழ்த்துவது என்று  கலங்கி நின்ற வேளையில், ஆண்டவர்  நான்  மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்கு கொடுத்தார். அப்படியே அவனோடும்,  இஸ்ரவேல்  ஜனங்களோடும் கர்த்தர் இருந்தார். கானானை  முழுவதுமாக  சுதந்தரிக்கும் படிக்கும் செய்தார். அதுபோல கர்த்தர் உங்களோடும், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடும், ஊழியங்களோடும் என்றும் உடனிருப்பார். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்பது கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற நல்வார்த்தையாய் காணப்படுகிறது. சாத்தான் உங்களுக்கு விரோதமாக எய்கிற எந்தவிதமான ஆயுதங்களும் ஒருவிதங்களிலும் உங்களைச் சேதப்படுத்துவதில்லை. ஆமான்  இஸ்ரவேல்  ஜனங்களை  அழிப்பதற்குச்  சதிச் செய்தான்,  ஆனால் காரியம் மாறுதலாய் முடிந்தது.  மொர்தெகாய்காகச் செய்யப்பட்ட தூக்குமரத்தில் ஆமானையே ராஜா தூக்கிப் போட்டார். உங்கள் எதிராளிகளின் நிமித்தம் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். ஆகையால், ஒன்றைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள். உற்சாகமாய் கர்த்தரைச் சேவியுங்கள். உங்களுக்கு அவர் கொடுத்த இப்படிப்பட்ட இன்னும் அனேக நல்வார்த்தைகள் ஒவ்வொன்றையும் துரிதமாய் நிறைவேற்றி உங்களை நிறைவாய் ஆசீர்வதித்து மகிழச்செய்வார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *