கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தருடைய ஜனங்கள்,நாம் கிறிஸ்துவை அறிந்த அந்த அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாக வாழவேண்டும். கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான ஜீவியம் செய்து அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்துகிற பாத்திரங்களாய் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஒவ்வொருவருக்கும் ஐந்து உணர்வு உறுப்புகள் (Sense organs) உண்டு. அவைகள் கண்,காது,மூக்கு,நாக்கு மற்றும் தோலாய் காணப்படுகிறது. அவைகளில் மூக்கு வாசனையை உணர்ந்து,அதை நறுமணமா அல்லது நாற்றமா என்பதை வகையறுக்கிறது. உலகத்தின் ஜனங்கள் தங்கள் வசதிக்கேற்ப வாசனைத் திரவியங்களை வாங்கித் தெளித்து செயற்கையான வாசனையை உருவாக்குகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் வாசனையைச் செயற்கையாய் உருவாக்க முடியாது, எந்த கடைகளிலுமிருந்து வாங்கவும் முடியாது. அப்படியானால், கர்த்தருடைய வாசனையை வீசுவது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி,சுத்தமான சகல மிருகங்களிலும்,சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு,அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார் (ஆதி. 8:20,21). நோவாவின் நாட்களில்,மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும்,அவன் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதது என்றும் கர்த்தர் கண்டு,தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் மனஸ்தாபப்பட்டார்,அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆகையால் மனுகுலத்தை வெள்ளத்தால் அழிக்கும் படிக்குச் சித்தம் கொண்டார். ஆனால் நோவா தன் காலத்திலிருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்து,தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஆகையால் அவனிடம் பேழையை உண்டுபண்ணும் படிக்குச் சொல்லி,அதின் அளவுகளையும் கர்த்தர் கொடுத்தார். நோவாவும் அவன் குடும்பமும் அந்த பேழையின் மூலம் வெள்ளத்தின் அழிவிலிருந்து தப்பினார்கள். நோவா பேழையிலிருந்து வெளியே வந்த பின்பு முதன் முதலாய் அவன் பலிசெலுத்தினான். கர்த்தர் பலியிலிருந்து எழுப்பின நல்வாசனையை முகர்ந்தார். அதினிமித்தம் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை என்றும், இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை என்றும் பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும்,சீதளமும் உஷ்ணமும், கோடைக்காலமும் மாரிகாலமும்,பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
நாம் நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்துச் செய்வது தான் புத்தியுள்ள ஆராதனை என்று ரோமர் 12:1ல் பவுல் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. நம்முடைய தேவன் அவருக்கு உகந்த அப்படிப்பட்ட பலியிலிருந்து எழும்புகிற வாசனையை முகருகிறவர். இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்க தாக,உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாவது தான், ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜீவியத்தை கண்டுகொள்ளுகிற வழி என்று ரோமர் 12:2ல் எழுதப்பட்டிருக்கிறது. நான் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன் என்று சொல்லுகிற எவரும் உலகத்தின் ஜனங்களுக்கு ஒத்த வேஷத்தைத் தரிப்பதில்லை. நாம் உலகத்திலிருந்தாலும் உலகத்தான் அல்ல என்ற உணர்வோடு ஜீவிக்கும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அ வனிடத்தில் பிதாவின் அன்பில்லை, ஏனெனில்,மாம்சத்தின் இச்சையும்,கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல,அவைகள் உலகத்தினாலுண்டானவைகள் என்று 1 யோவான் 2:15-16ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் சுகந்த வாசனை நம் வாழ்விலிருந்து எழும்ப வேண்டும் எனில் உலகத்தானைப் போல ஜீவிக்காமல் பிரித்தெடுக்கப் பட்ட ஜீவியம் செய்யுங்கள். அடுத்ததாகத் தேவனுடைய பூரணச் சித்தம் என்ன என்பதைப் பகுத்தறிந்து அதற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட வாழ்வு வாழ நாம் நம்மை அற்பணிக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு காரியங்களிலும் தேவ சித்தத்தை அறிந்து செயல்படுங்கள்;. அதுபோல மனம் புதிதாகிறவர்களாய் காணப்படுங்கள். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் பழையவை யாவும் ஒழிந்தது,எல்லாம் புதிதாயின என்ற வார்த்தையின் படி,பழையப் பாவ சுபாவங்களை விட்டு,கிறிஸ்துவைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாய் மறுரூப ஜீவியத்தை நோக்கி நாம் கடந்துசெல்ல வேண்டும், நிலைக்கண்ணாடியாகிய கர்த்தருடைய வசனத்தில் கர்த்தருடைய சுபாவங்களைக் கண்டு, அந்த சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்பட, கர்த்தருடைய வார்த்தையை அதிகமாய் வாசிக்கிறவர்களாகவும், தியானிக்கிறவர்களாகவும், கைக்கொள்ளுகிறவர்களாகவும் காணப்படவேண்டும். அப்பொழுது நம்மிலிருந்து எழும்புகிற அவருடைய சாயலின் வாசனையைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வார்.
கர்த்தருடைய பிள்ளைகளே,பூமியில் நீதிக்குரிய ஜீவியம் செய்கிற உங்களைப் போன்ற சில நல்லவர்களுடைய வாழ்விலிருந்து எழுப்புகிற நல்வாசனையை கர்த்தர் முகருவதினால் தான் பூமி இன்னும் நிலைகொண்டிருக்கிறது. அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நாம் நம்மைத் தாழ்த்தி,ஜெபம் பண்ணி,அவருடைய முகத்தைத் தேடி,நம்முடைய பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பும் போது, நம்முடைய தேசத்துக்கு அவர் ஷேமத்தைக்கொடுப்பேன் என்பது அவருடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. ஆகையால் நாம் கர்த்தரை அறிந்த அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாய் ஜீவிக்கக் கர்த்தர் தாமே ஒவ்வொருவருக்கும் உதவிசெய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org