…நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம் (2 கொரி. 10:5).
நம்முடைய எண்ணங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்துவின் சிந்தைக்குள் கீழ்ப்படியச் செய்து, அவருடைய சிந்தையும் எண்ணங்களும் நமக்குள் வருவது கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த ஜெயங்கொள்ளுகிற ஜீவியமாகும். ஒருவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான் என்று நீதி. 23:7ல் எழுதப்பட்டிருக்கிறது (As a man thinks, so is he). இருதயத்தின் நினைவுகளைக் கர்த்தருடைய ஆவியானவர் முழுவதுமாக ஆக்கிரமிக்க வேண்டும், இல்லையேல் பிசாசு குடிகொண்டு விடுவான், கசப்புகளுக்கும், கவலைகளுக்கும், வெறுப்புகளுக்கும், இச்சைகளுக்கும் இடம் கொடுத்து, அவைகளால் இருதயத்தை நிரப்பினால், அப்படியே பாதாளத்திற்கு இழுத்துக்கொண்டு சென்றுவிடுவான். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று நீதி. 4:23ல் எழுதப்பட்டிருக்கிறது (It determines the course of your life). நம்முடைய இருதயத்தின் நினைவுகளைக் காத்துக் கொள்ளும் போது, அதுவே நம்முடைய வாழ்வின் ஆசீர்வாதத்தின் பாதையாக மாறிவிடுகிறது. யோசேப்பு தன் இருதயத்தை பாவச் சிந்தைகளுக்கு விலக்கிக் காத்துக்கொண்டதினால் எகிப்தில் பார்வோனின் அடுத்த நிலைக்குக் கர்த்தரால் உயர்த்தப்பட்டான். ஆனால் சிம்சோன் கண்களுக்கு பிரியமானவற்றைச் செய்ததினால், கடைசியில் கண்பிடுங்கப்பட்டவனாய், வேடிக்கை பொருளாக மாறிவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஆவிக்குரிய உன்னத ஜீவியம் செய்ய உங்கள் இருதயச் சிந்தைகளைக் காத்துக்கொள்ளுங்கள்.
இயேசுவின் சிந்தைக்குள் நம்முடைய எண்ணங்களை சிறைப்படுத்துவது எப்படி? உங்கள் கவனத்தையும் சிந்தையையும் நீதிக்குரிய காரியங்களின் மேல் வைத்துவிடுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பிய சபைக்கு எழுதும் போது, கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் என்று பிலி. 4:8ல் எழுதுகிறார். ஐரோப்பா கண்டத்தில் முதல் முதலில் சுவிஷேசம் பிலிப்பிய பட்டணத்திற்கு பவுலின் மூலம் கடந்து வந்தது. லீதியாள் தான் முதல் முதலில் சுவிஷேசத்தை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டாள் (அப். 16:12-15). பிலிப்பிய விசுவாசிகள் தங்கள் எண்ணங்களைக் கிறிஸ்துவுக்குள்ளாக சிறைப்படுத்துவதற்காக பவுல் கூறின ஆலோசனையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. கர்த்தருடைய ஜனங்களுடைய சிந்தைகளும் இப்படிப்பட காரியங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால், கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை நம்மிலும் இருக்கும்.
எதிர்மறையான எண்ணங்களை (Negative thoughts) உங்களை விட்டு அகற்றிவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று எரே. 29:11ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் உங்கள் பேரில் கொண்டிருக்கிற நினைவுகள் நன்மைக்கு ஏதுவானவைகள். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று ரோமர் 8:28ல் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்தவை அத்தனையும் நமக்கு நன்மையானதே என்ற ஆழமான விசுவாசம் நமக்குள்ளாகக் காணப்படும் போது எதிர்மறையான எண்ணங்கள் நம்மை விட்டு விலகும். கசப்புகளுக்கும், வைராக்கியங்களுக்கும், கோபங்களுக்கும் இடம்கொடாத ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிக்கும் பொழுது கல்வாரியின் அன்பு நம் இருதங்களை நிரப்பும், இயேசுவின் சிந்தை நம்மை ஆக்கிரமிக்கும். சோம்பலாய் காணப்படாதிருங்கள், ஜெபத்திலும், வேதவாசிப்பிலும், ஆராதனையிலும், ஊழியத்திலும், கர்த்தருக்கு அடுத்த காரியங்களில் உங்களை இடைவிடாமல் ஈடுபடுத்திக் கொள்ளும் போது, கிறிஸ்துவின் சாயலாக நீங்கள் அனுதினமும் மாறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் அவருடைய சிந்தைக்குள்ளாக சிறைப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org