நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்ததுஅவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன் (வெளி. 19:7).
வெளிப்படுத்தல் விஷேசத்தில் இயேசுகிறிஸ்துவை ஆட்டுக்குட்டியானவர் என்று குறிப்பிட்டு அனேக இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனத்திலும் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது என்றும் அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. யூதர்கள் திருமணத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் (Betrothal) செய்வது அவர்களுடைய வழக்கம். நிச்சயதார்த்தத்திலிருந்து திருமண நாள் வரைக்கும் ஒரு கால இடைவெளியை வைத்திருப்பார்கள். அந்தநாட்களில் திருமணத்திற்கென்று நியமிக்கப்பட்டவள் தன்னைப் பரிசுத்தப்படுத்தி, உத்தமமாய் காத்துக்கொண்டு, புத்தியுள்ள கன்னிகையாய் தன்னை ஆயத்தப்படுத்தி விவாகத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். கர்த்தருடைய பிள்ளைகள் அத்தனைப் பேரும் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்டவர்கள், ஆகையால் கலியாண நாளுக்காக நம்மை ஆயத்தப் படுத்தும் படிக்குக் கர்த்தர் கொடுத்த கிருபையின் நாட்களாய் இந்த நாட்கள் காணப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் நாட்களில் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்துநித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன், நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன், உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன் (ஓசியா 2:19,20) என்று தேவன் கூறினார். இது மாம்சீக உறவைக் குறிப்பது அல்லஆவிக்குரிய, பரிசுத்தமான, உன்னத உறவைக் குறிப்பதாகக் காணப்படுகிறது. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உன்னத விவாகத்திற்கு பாத்திரவான்களாய் தங்களைக் காத்துக் கொள்ளவில்லை. மணவாட்டி சபையாகிய நாமும் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்டவர்கள் என்று 2கொரி. 11:210ல் எழுதப்பட்டிருக்கிறது. மணவாளனாகிய இயேசு திருடனைப் போல நம்மைச் சேர்த்துக் கொள்ளும் படிக்கு வருவார். அவருடைய வருகை எப்பொழுது வேண்டும் என்றாலும் காணப்படும். அதுவரைக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் நம்மைப் பரிசுத்தப்படுத்தி, ஆவியோடும் உண்மையோடும் அவரைச் சேவித்து, அவருக்குப் பிரியமானதைச் செய்து, அனுதினமும் தேவச் சித்தத்தைச் செய்ய வேண்டும். திடீரென்று நாம் எதிர்பாராத நேரத்தில் கர்த்தருடைய வருகையிருக்கும், கர்த்தர் மத்தியாவானில் வெளிப்படுவார். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார், அப்பொழுது கிறிஸ்துக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் என்று 1 தெச. 4:16,17ல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நாள் பாக்கியநாள். களிகூறுதலின் நாளாக, மனமகிழ்ச்சியின் நாளாகக் காணப்படும். ஒருவரும் கர்த்தருடைய வருகையில் கைவிடப்பட்டுவிடக் கூடாது. நித்திய மோட்சம் எவ்வளவு நிச்சயமோ, அதுபோல நித்திய அக்கினிக் கடலாகிய நரகமும் நிச்சயம். நித்திய நரகத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒருவன் பூமியில் பிறவாத்திருந்தால் நலமாயிருக்கும்.
கர்த்தரோடு காணப்படும் படிக்கு நாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலன்களை அடையும் படிக்கு வெளிப்படவேண்டும் என்று 2கொரி. 5:10ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டினவர்கள், உண்மையும் உத்தமுமாய் அவருக்கு ஊழியம் செய்தவர்கள், இயேசு என்னும் நாமத்திற்காக பிரயாசப்பட்டவர்கள் உண்மையாய் அவரைத் தேடினவர்கள், ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதித்தவர்கள், அத்தனைப் பேரையும் கர்த்தர் கனம் பண்ணும் போது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அதன்பின்பு எடுத்துக்கொள்ளப்பட்ட கர்த்தருடைய ஜனங்கள் மணவாட்டி என்ற நிலையிலிருந்து மனைவி என்ற ஆவிக்குரிய உன்னத நிலைக்குக் கடந்துசெல்லுவார்கள். அப்போது ஒவ்வொருவருக்கும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அளிக்கப்பட்டது என்றும் அந்த வஸ்திரம் வெண்மையானது என்றும் வெளி.19:8,14ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த பூமியில் வெண் வஸ்திரம் அணியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் பரலோகத்தில் வெண்ணாடை அணிந்தவர்களின் கூட்டத்தில் காணப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். பூமியில் எதையிழந்தாலும் பரவாயில்லை, ஆனால் பரலோகத்தை, புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போலக் காணப்படுகிற புதிய எருசலேமை இழந்துவிடாதிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிநான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:2,3) என்பது காத்தருடைய வாக்குத்தம். நம்மைச் சேர்த்துக்கொள்ளும் படிக்கு வருகிற மணவாளனாகிய இயேசுவை சந்திக்கும்படிக்கு ஆயத்தமாய் காணப்படக் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கிருபை புரிவாராக!
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org