சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்யுங்கள்.

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்(ரோமர் 2:7).

ஆவிக்குறிய வாழ்க்கை என்பது வெகுதூர பயணம் ஆனப்படியினாலே சோர்வு வருவது சகஜம். விசுவாச வாழ்கை ஒரு நடுக்கடல் பயணம் என்று சொல்வார்கள், ஆரம்பத்தில் பயணம் செய்ய சுகமாக இருக்கும் ஆனால் ஆழ்கடல் போகும்பொதுதான் ஒருவகையான பயமும் சோர்வுகளும் பிரச்சனைகளும் வரும். சோர்வுற்ற நிலையில் அனேகர் சொல்லும் வார்த்தை; கர்த்தர் எனக்கு மாத்திரம் ஏன் இப்படிசெய்தார் என்பதாக. யாக்கோபின் குமாரர்கள் எகிப்திற்கு சென்று தானியம் வாங்கிகொண்டு திரும்பின வேளையில் அவர்களுடைய  பணம் சாக்கிலே இருப்பதை கண்டு மிகவும் பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்து சொன்ன வாத்தை  தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன?(ஆதி 42:28), இப்படி பலவிதமான சோதனைகளும் பிரச்சனைகளும் சோர்வுகளும்  நம் வாழ்கையில் வரும்போது நற்கிரியைகள் செய்வதை மறந்துவிடுகிறோம். ஆனால் வேதம் சொல்வதென்ன? நீங்கள் சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளை செய்யுங்கள் என்பதாக. இந்நாட்களில் தேவப்பிள்ளைகள் நற்கிரியைகள் செய்கிறவர்களாய் காணப்படவேண்டும்.

யோசேப்புக்கு எத்தனையோ பிரச்சனைகள் சோதனைகள், ஆனாலும் அவர் சோர்ந்துபோகவில்லை. தன் சொந்த சகோதரர்களால் வெறுக்கப்பட்டு தூர தேசத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டபோதிலும் அவர் நற்கிரியைகள் செய்வதை மறந்துவிடவில்லை, தீமைசெய்தவர்களுக்கு நன்மைகள் செய்கிறவராய் காணப்பட்டார். மாத்திரமல்ல தன் சொந்த சகோதரர் குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்துபாதுகாத்தார்(ஆதி47:12).

இயேசு கிறிஸ்து பூமியில் உலாவின நாட்களில் அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திருந்தார் என்று(அப் 10:38)ல் வாசிக்கலாம். அவர் தன் சொந்த ஜனங்களினாலே வெறுக்கப்பட்டார், அவமானப்படுத்தப்படார், காயப்படுத்தப்பட்டார், கடைசியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் மரணிக்கும் தருவாயில் கூட தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக வேண்டுதல் செய்கிறவராய், பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே(லூக் 23:34) என்று அவர்களுக்காக விண்ணப்பித்தார்.

தேவப்பிள்ளைகளே நற்கிரியைகள் செய்வதை மறந்துவிடாதீர்கள்!..  ஒருவேளை உங்களுக்கு விரோதமாய் அனேகர் எழும்பலாம் அவர்களுக்காய் ஜெபியுங்கள், தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்(1 யோவா 2:6) அவர் நற்கிரியைகள் செய்ததுபோல தானும் நற்கிரியைகளை செய்யவேண்டும். சோர்ந்துபோகாமல் தேவனிடத்தில் விசுவாசமாய் இருந்து நற்கிரியைகளை செய்யுங்கள். தபீத்தாளைப்போல நற்கிரியைகளையும், தர்மங்களையும் செய்யுங்கள். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்(கலா6:9)  என்பது கர்த்தருடைய வார்த்தையாய் காணப்படுகிறது. யோசேப்பை போல, கிறிஸ்துவைபோல சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளை செய்து, அழியாத மகிமையைத் தேடுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *