ஒரு தருணத்தை எதிர்நோக்கி.

பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்த பின்பு சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் (லூக்கா 4:13).

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின்பு நாற்பது நாட்கள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். பிசாசுக்கு இன்னொரு பெயர் சோதனைக்காரன் என்பது. உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ச்சிக்கிற  சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று 1 பேதுரு 5:8ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளைச்  சோதிக்குப் படிக்குப் பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து, ஒரு  வேடனைப் போல வகைதேடி, ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்து  வஞ்சிக்குப்படிக்கு அலைந்துதிரிகிறவன்.  ஒரு நாள்  தேவபுத்திரர்  கர்த்தருடைய சன்னிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து,  நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார், சாத்தான் கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக, பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான் (யோபு 1:6,7). ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் உங்களைச்  சோதிக்குப்படிக்கு  வகைதேடி  சுற்றித்திரிகிறவனுடைய தந்திரங்களை  முன்னறிந்து அவனுக்கு இடம் கொடாமல் காணப்படவேண்டும். நீங்கள் அவனுக்கு எதிர்த்து நின்றால் அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.   

இயேசுவின் சோதனை நாட்கள் முடிந்தவுடன் அவருக்கு  பசியுண்டாயிற்று.  அப்பொழுது பிசாசு அவரை நோக்கி, நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். ஆதியிலிருந்து சாப்பிடுகிற காரியங்கள்  மனுஷனுக்குக் கண்ணியாய் இருந்ததை வேதத்தின் மூலம் பார்க்கமுடிகிறது.  ஏதேன் தோட்டத்தில் பிசாசு பழத்தை புசிக்கும் படிக்கு ஏவாளிடம் கூறினான். அவள் செவிகொடுத்ததின் நிமித்தம்  ஆதிப்பெற்றோரைப் பாவத்தில் வீழ்த்தினான். ஈசாக்கு வாய்க்கு ருசியான உணவிற்கு முதலிடத்தைக் கொடுத்ததினால் தன் மூத்த குமாரன்  ஏசாவை ஆசீர்வதிக்க விரும்பியும் இளையவனை ஆசீர்வதித்தான். ஏசாவும் ஒரு வேளைக் கூழுக்காக தன் சேஷ்டபுத்திர  பாகத்தை விற்றுப் போட்டான்.  இப்படிச்  சாப்பிடுகிறக் காரியங்களை ஆயுதமாய் பயன்படுத்தி அனேகரை வீழ்த்தினவன், இயேசு பசியாயிருந்த வேளையில்  அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி அவரையும் வீழ்த்த வகைதேடினான். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் விருந்துகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். அடுத்தவர்கள் வீடுகளில் சென்று விருந்து, நட்பு என்று நினைத்து அதிக நேரம் காணப்படாதிருங்கள். அது கூட ஒருவேளை உங்களுக்குக் கண்ணியாக முடியும்.  நீ ஒரு அதிபதியோடே போஜனம் பண்ண உட்கார்ந்தால் உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ  போஜனப்பிரியனாயிருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே,  அவைகள் கள்ளப்போஜனமாமே என்று நீதி. 23:1-3ல் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கள்ளப் போஜனங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் அனேகர்.   

இயேசு பசியாயிருந்தும் கல்லுகளை அப்பங்களாக மாற்றுவதற்கு வல்லமையுள்ளவராயிருந்தும்  பிசாசைப் பார்த்துமனுஷன்  அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும்  பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்று கூறி அவனை  ஜெயித்தார்.  பிசாசின் எந்த  வார்த்தைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒருநாளும்  செவிகொடாதிருங்கள். அப்போஸ்தலனாகிய  பவுலின்  இரண்டாவது  மிஷனரிப்  பயணத்தில்  பிலிப்பு  பட்டணத்தில் ஊழியம் செய்த நாட்களில் குறிசொல்லுகிற  ஆவியை உடைய ஒரு பெண் இந்த  மனுஷர்  உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள், பவுல்  சினங்கொண்டு திரும்பிப்பார்த்து:  நீ இவளைவிட்டுப் புறப்படும்படி  இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று  அந்த ஆவியுடனே சொன்னான், அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. பிசாசு நீங்கள் மேட்டிமைக் கொள்ளுகிற வார்த்தைகளைப் பலர் மூலம் பேசுவான் ஜாக்கிரதையாயிருங்கள்.   அதன்பின்பு இயேசுவை உயர்ந்த மலையின்மேல் கொண்டு போய்உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து இவை எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது  எனக்கு இஷ்டமானவனுக்கு  இவற்றைக்  கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப்  பின்னாகப்போ  சாத்தானேஉன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக  என்று எழுதியிருக்கிறதே என்று கூறி  மீண்டும் அவனை ஜெயித்தார். அடுத்ததாக இயேசுவை  எருசலேமுக்குக்  கொண்டுபோய் தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி நீர் தேவனுடைய குமாரனேயானால் இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில் உம்மைக் காக்கும் படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்று கூறி மீண்டும் அவனை ஜெயித்தார். பிசாசு கர்த்தருடைய வார்த்தைகளை அறிந்தவன், வேத  வார்த்தைகளைப்  பயன்படுத்தி  இயேசுவைச் சோதிக்க முயன்றவன். இந்நாட்களிலும்  வேத வார்த்தைகளை பயன்படுத்தி ஜனங்களை வஞ்சிக்கிறவர்களின் கூட்டம் மிகுதி. ஆகையால்  பெரொயா  பட்டணத்து ஜனங்களைப் போல எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

பிசாசானவன்  இயேசுவைச்  சோதித்த பின்பு சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் என்று மேற்குறிப்பிடப்பட்ட  வசனம் கூறுகிறது. ஆகையால்  இனி ஒரு தருணம் கிடைக்கும் போது மீண்டும்  இயேசுவைச்  சோதிக்கிறவன் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.  இயேசுவைச் சிலுவை மட்டும் சோதிக்கிறவனாய் காணப்பட்டான். ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையைச் சிலுவை மரணத்தின் மூலம் நசுக்குவார் என்பதை அறிந்தவன். ஆகையால் இயேசு சிலுவையில்  மரணத்திற்குள்ளாகக்  கடந்து செல்லுவதைத் தடுக்க முயன்றான். ஆனால் இயேசு பூரணமாய் பிதாவின்  சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து  பிசாசை  முழுவதுமாய் வென்றார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறவன். ஆகையால் எந்த விதத்திலும் பிசாசுக்கு  இடம்கொடாதிருங்கள். பிசாசினால் மோசம் போய்  விடாதிருங்கள். ஒரு விசை அவனை ஜெயித்துவிட்டால் இனி அவன் சோதிப்பதில்லை என்று நினைத்து விடாதிருங்கள். ஒரு  தருணத்திற்காகக்   காத்திருக்கிறான் என்பதை  மறந்துவிடாதிருங்கள்.  கர்த்தருக்குப் பயத்து, அவருடைய வசனத்திற்கு நடுநடுங்கி, பாவத்தை விட்டோடி,  இடைவிடாமல்  ஜெபம் பண்ணி பரிசுத்தவான்களுடைய  ஐக்கியத்தில் காணப்படுங்கள், அப்போது அவனை எளிதாய் ஜெயிக்கலாம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *