உத்தம வேதபாரகனாகிய எஸ்றா.

ராஜாதி ராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய  நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய  எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதான முண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்: நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும்,  அதின் ஆசாரியரிலும்,  லேவியரிலும்,  உன்னோடே கூட  எருசலேமுக்குப்  போக மனப்பூர்வமாயிருக்கிற  யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது (எஸ்றா 7:12, 13).

பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா,  ஆசாரியனாகிய  எஸ்றாவைக்  குறித்து, தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்று சாட்சி கொடுத்தார்.  பாபிலோனிய  சிறையிருப்பிலிருந்து யூத ஜனங்கள் எருசலேமுக்கு திரும்பிவந்த நாட்களில்,  நேபுகாத்நேச்சாரால்  இடித்துத் தள்ளப்பட்ட  எருசலேம்  தேவாலயத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவதற்கு கோரேஸ்,  தரியு, அர்தசஷ்டா என்ற தேவனை அறியாத மூன்று  பெர்சிய  ராஜாக்களைக்  கர்த்தர் பயன்படுத்தினார். இவர்களில் அர்தசஷ்டா ராஜாவின் நாட்களில் தான் எஸ்றா எருசலேமிற்கு திரும்பிவந்தான். அவன் மூன்று காரியங்களைச்  செய்ய தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான்,  கர்த்தருடைய வேதத்தை ஆராயவும்,  அதின்படி செய்யவும்,  இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும்  என்று எஸ்றா 7:10ல் எழுதப்பட்டிருக்கிறது. 

வேதத்தை வாசிப்பது வேறு,  ஆராய்வது என்பது வேறு. இயேசு கூறும்போது,  வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்,  அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றார். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் பெரொயா சபை விசுவாசிகள்  நற்குணசாலிகளாய்  காணப்பட்டார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகள் இந்த நாட்களில்  வேத வசனங்களைத் திரும்பத் திரும்ப வாசித்து அசைபோடுகிறவர்களாய் காணப்பட வேண்டும்.  ஒவ்வொரு வசனங்களிலும் கர்த்தர்  எதைக் கற்றுக் கொள்ளும் படிக்குக் கூறுகிறார் என்றும்,   எவற்றை நம்முடைய வாழ்க்கையில்  சரிசெய்யும் படிக்குக் கூறுகிறார் என்றும்,  கீழ்படியும்படிக்கு எதைச் சொல்லுகிறார் என்றும்,  எதை வாக்குத்தத்தமாகக் கொடுக்கிறார் என்றும் பகுத்து ஆராய்ந்து தியானிக்கும் போது வேத தியானம் இன்பமாய் காணப்படும்.  எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய  மோசேயின்  நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான் என்று எஸ்றா 1:6ல் எழுதப்பட்டிருக்கிறது,  அதற்குக் காரணம் வேதத்தை ஆராயும் படிக்கு தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியதே. 

வேதவாக்கியங்களின் படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான்,  அதாவது வசனத்தின்படி வாழவும் தன்னை அர்ப்பணித்திருந்தான். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்திலும் கூட,  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,  இவற்றின்படி  செய்கிறவன் எவனோ,  அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்,  பெருமழை சொரிந்து,  பெருவெள்ளம் வந்து,  காற்று அடித்து,  அந்த வீட்டின்மேல் மோதியும்,  அது விழவில்லை,  ஏனென்றால்,  அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,  இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ,  அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடுவேன்,  பெருமழை சொரிந்து,  பெருவெள்ளம் வந்து,  காற்று அடித்து,   அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது,  விழுந்து முழுவதும் அழிந்தது (மத். 7:24-27). கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கிறவர்களாகவும்,  கேட்கிறவர்களாகவும்,  ஆராய்கிறவர்களாகவும் மாத்திரமல்ல அவைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறவர்களாகவும்,  வசனத்தின் படிக்கு வாழவும் வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்,  கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் (வெளி. 1:3).

எஸ்றா வேதத்தின் கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும் தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். தான் அறிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் ஆயத்தமாய் காணப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகள் நாம் கற்றுக்கொண்டவற்றை  மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும். ஆண்டவர் நம்மெல்லோருக்கும் கொடுத்த மாபெரும் கட்டளையில்(Great Commission),  நான் உங்களுக்குக்   கட்டளையிட்டயாவையும்  அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு  உபதேசம் பண்ணுங்கள்  என்பதும் ஒருபகுதியாகக் காணப்படுகிறது. பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? என்று வேதம் கேட்கிறது.  மோசே தன்னுடைய  வாஞ்சையைப் பாட்டாகப் பாடும்போது,  மழையானது இளம்பயிரின்மேல்  பொழிவதுபோல,  என் உபதேசம் பொழியும், பனித்துளிகள்  புல்லின்மேல் இறங்குவதுபோல,  என் வசனம் இறங்கும் என்று உபா. 32:2ல் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது.  கர்த்தருடைய பிள்ளைகள் உத்தமமாய் ஜீவித்து,  வேதத்தை ஆராய்ந்து,  வசனத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து,  நம்முடைய அனுபவங்களையும்,  சாட்சிகளையும் கர்த்தருடைய வார்த்தையின் மூலமாய்  மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் போது,  உத்தம பாத்திரங்கள் என்று எஸ்றாவைப் போல உலகம் உங்களைக் குறித்தும் சாட்சியிடும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *